முகமது சிராஜ் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கவில்லை எனபதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உறுதிப்படுத்தினார்

www.indcricketnews.com-indian-cricket-news-034

கேப்டவுன்: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  1 – 1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரில் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி: 11) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் துவங்கவுள்ளது.

இந்த மைதானத்தில் தான் தென்னாப்பிரிக்கா அணி தனது அதிகப்படியான டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது. அதேபோல இந்த மைதானத்தில் இந்திய அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை என்பதால் மிக கவனத்துடன் ப்ளேயிங் 11- ஐ தேர்வு செய்ய வேண்டிவுள்ளது. மேலும் கடந்த 2வது டெஸ்ட் போட்டியில் தோள்பட்டை வலி காரணமாக வெளியேறியிருந்த விராட் கோலி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

இதைத்தொடர்ந்து, போட்டியின் ப்ளேயிங் 11ல் இருக்கப்போகும் மாற்றம் குறித்து கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்திப்பில் கூறியதாவது:  “மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தற்போது முற்றிலும் நான் குணமாகி முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன்.

ஆனால் காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பவுலிங்கில் நட்சத்திர வீரரான முகமது சிராஜ் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை. இதுபோன்ற முக்கியமான போட்டியில் 100% உடற்தகுதி இல்லாத ஒரு பந்துவீச்சாளரை பணயம் வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஆகையால் மூன்றாவது டெஸ்டில் முகமது சிராஜ் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிராஜுக்கு மாற்றாக இந்திய அணியில் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா என 2 சீனியர் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில் இஷாந்த் சர்மா நன்கு பவுன்சர் போடக்கூடியவர், உமேஷ் யாதவ் பந்தை நன்கு வேகமாக வீசக்கூடியவர். இருவரும் 100 மற்றும் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனுபவம் உள்ளவர்கள் .ஆனால் நியூலேண்ட்ஸ் மைதானதம் அதிகப்படியான வேகம் மற்றும் அதிகப்படியான பவுன்சர் பந்துகள் இரண்டுக்குமே உகந்ததாகும். எனவே இருவரில் யாரை சேர்ப்பார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள கோஹ்லி, “கேப்டனான நானும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளோம். இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீசக்கூடியவர்கள் என்பதால் யாரை விடுவது, யாரை தேர்ந்தெடுப்பது என்பது குழப்பமாகவும் கடினமானதாகவும் உள்ளது.” இவ்வாறு அந்த சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும், ஹனுமா விஹாரியின் இடத்திற்கு மாற்று வீரராக கோஹ்லி களமிறங்குகிறார். ரகானே மற்றும் புஜாரா இருவருக்கும் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.