மில்லர், தெவாட்டியா அதிரடி விளையாட்டால் லக்னோவை வீழ்த்தியது குஜராத்.

www.indcricketnews.com-indian-cricket-news-0111

மும்பை:  ஐபிஎல் டி20 போட்டியின் நான்காவது லீக் ஆட்டத்தில் புத்தம்புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதியது.

இப்போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல்-குவின்டன் டி காக் ஜோடியில் குஜராத் அணியின் ஓபனிங் பௌலர் முகமது ஷமி வீசிய முதல் பந்தில் கே.எல்.ராகுல் கோல்டன் டக் ஆவுட்டாகியும், 3வது ஓவரில் குவின்டன் டி காக் 7(9) ரன்களுடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய லீவிஸ் 10(9) ரன்கள் எடுத்து வருண் ஆரோன் பந்துவீச்சிலும்,  6(5) ரன்கள் எடுத்த மணிஷ் பாண்டே முகமது ஷமி வீசிய 5வது ஓவரிலும் ஆட்டமிழந்தனர்.இதனால் 29 ரன்கள் சேர்ப்பதற்குள் லக்னோ அணி 4 விக்கெட்களை பவர்பிளேவில் இழந்து தடுமாறியது.

இதனையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா-ஆயுஷ் பதோனி ஆகிய இருவரும் அரைசதம் விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.  இந்நிலையில் ரஷித் கான் வீசிய 16-வது ஓவரில் தீபக் ஹூடா 6 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 55(41) ரன்கள் எடுத்து எல்பிடபள்யூ ஆகி வெளியேறினார். மேலும் 19வது ஓவரில் பதோனி 4 பவுண்டரி,3 சிக்ஸர் உட்பட 54(41) ரன்கள் எடுத்து வருண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய குர்னல் பாண்டியா 21(13) ரன்களிலும், சமீரா 1(1) ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவருக்கு 6 விக்கெட்இழந்து 158 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியிலும் சமீரா பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் டக் அவுட்டாகியும், அடுத்துவந்த விஜய் சங்கர் 4(6) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் 15 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய குஜராத் அணியை மேத்யூ வேட்-ஹர்திக் பாண்டியா ஜோடி நிதானமாக விளையாடி ரன் ரேட்டை அதிகப்படுத்தினர். இந்நிலையில் 5 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 33(28) ரன்களை ஹர்திக் பாண்டியா எடுத்திருந்தபோது குர்னல் பாண்டியா பந்துவீச்சிலும்,4 பவுண்டரி உட்பட 30(29) ரன்களை வேட் எடுத்தபோது தீபக் ஹூடா பந்துவீச்சிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை நெருக்கடியிலிருந்து மீட்ட டேவிட் மில்லர் 30(21) ரன்கள் எடுத்திருந்தபோது அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய  ராகுல் தெவாட்டியா 5 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 40(24) ரன்கள் எடுக்க, அவருக்கு துணையாக அபினவ் மனோகர் 3 பவுண்டரி உட்பட 15(7) ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இறுதிவரை இருந்தனர்.இதனால் குஜராத் அணி 19.4வது ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஐபிஎல்-ல் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.

Be the first to comment on "மில்லர், தெவாட்டியா அதிரடி விளையாட்டால் லக்னோவை வீழ்த்தியது குஜராத்."

Leave a comment

Your email address will not be published.


*