மிரட்டல் பௌலிங்…ராஜஸ்தானை அசால்ட்டாக வென்ற கொல்கத்தா அணி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றிபெற்ற நிலையில், இன்று ரன்களை குவிக்கத் தவறியதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 137 ரன்களும் எடுத்தன.

துபாயில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த அணிகள் தோல்வியை தழுவிய நிலையில், ராஜஸ்தான் அணியும் பீல்டிங் தேர்வு செய்து தோல்வியைச் சந்தித்துள்ளது.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி ரன்களை குவிக்கத் திணறியது. தொடக்க வீரர் சுனில் நரேன் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷுப்மன் கில் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

இருப்பினும், நிதிஷ் ராணா (22), ஆண்ட்ரே ரஸல் (24), தினேஷ் கார்த்திக் (1) போன்றவர்கள் சிறப்பாக சோபிக்க தவறினர். ஷுப்மன் கில் 34 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்துக் களமிறங்கிய இயான் மோர்கன் 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைபற்றி அசத்தினார்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியை அளித்தது. ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ரோபின் உத்தப்பா, ரியான் பராக் போன்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஜாஸ் பட்லர் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 16 பந்துகளில் 21 ரன்களை சேர்த்தார். ராகுல் தேவத்தியா 14 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்து தோல்வியை நோக்கி பயணித்தது.

ஸ்ரேயஸ் கோபால், ஜோப்ரா ஆர்ச்சர் போன்றவர்கள் இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டத் தவறினர். டாம் கரன் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடி அரை சதம் கடந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சாளர்கள் ஷிவம் மவி, கமலேஷ் நகர்கோடி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தல இரண்டு விக்கெட்களை கைப்பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிக்கரமாக இருந்தனர்.

Be the first to comment on "மிரட்டல் பௌலிங்…ராஜஸ்தானை அசால்ட்டாக வென்ற கொல்கத்தா அணி!"

Leave a comment

Your email address will not be published.