மழை காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் சமனில் முடிந்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-10593

பெங்களூரு: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை  கடந்த ஜூன் 9 ஆம் முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றிபெற்றதால் 2-2 என்ற கணக்கில் சமநிலை அடைந்தது.

இந்நிலையில் இத்தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பெங்களூரில் உள்ள எம்.சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கேஷவ் மஹராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆனால் ஆட்டம் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் பெங்களூரில் கனமழை பெய்யத் தொடங்கியது .இதனால் திட்டமிட்டபடி 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய ஆட்டம் 7:50 மணிக்கு தொடங்கப்பட்டது.

மேலும் மழையின் காரணமாக 50 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்ட போட்டி என்பதால், இரு அணிகளுக்கும் ஒரு ஓவர்கள் குறைக்கப்பட்டு, 19 ஓவர்களுக்கு மட்டுமே ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பேட்டிங் செய்ய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன்-ருத்துராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கினர்.

இதில் கேஷவ் மஹராஜ் வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட இஷான் கிஷன் 2 சிக்ஸர்களை விளாசி அட்டகாசமான ஆட்டத்தை துவங்கினார். இருப்பினும் லுங்கி இங்கிடி வீசிய 2வது ஓவரில் இஷான் கிஷன் 15(7) ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, மறுமுனையில் லுங்கி இங்கிடி வீசிய 4வது ஓவரில் 1 பவுண்டரி மட்டுமே அடித்த ருதுராஜ் கெய்க்வாட் 10(12) ரன்களுக்கு ஆட்டமிந்தார்.

இதனைத்தொடர்ந்து கேப்டன் ரிஷப் பந்த் – ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் தடைபட்டது. அப்போது இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

பெங்களூருவில் எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் வெளியேற சிறப்பு வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளதால் ஆட்டத்தை 5 ஓவர்களாக குறைத்து விளையாட நடுவர்கள் தரப்பு முடிவெடுத்தனர். ஆனால் முன்பை போல் இல்லாமல் கனத்த மழை பெய்ததை அடுத்து ஆட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு வெளியானது.

இதனால் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கேஷவ் மஹராஜ் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் கோப்பைக்கு ஒன்றாக  போஸ் கொடுத்தனர்.

Be the first to comment on "மழை காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் சமனில் முடிந்தது."

Leave a comment

Your email address will not be published.


*