மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

www.indcricketnews.com-indian-cricket-news-034

மவுண்ட் மாங்காவுனி: நியூசிலாந்தின் மவுண்ட் மாங்காவுனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் மகளிர்  ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று (மார்ச்: 6) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற  இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய செஃபாலி வர்மா 0(6) டக் அவுட்டாகி ஷாக் கொடுத்தார். இதன் பின்னர் பொறுப்புடன் விளையாடிய தீப்தி சர்மா- ஸ்மிருதி மந்தனா ஜோடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் தீப்தி சர்மா 40(57) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து 52(37) ரன்களின்போது பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர்  களமிறங்கிய ஹர்மான் பிரித் கவுர் 5(14) ரன்களிலும், ரிச்சா கவுஷ் 1(5) ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க , அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மித்தாலி ராஜ் 9(36) ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் 33வது ஓவரிலேயே 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 114 ரன்கள் எடுத்து தடுமாறியது.

இதனையடுத்து,  இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க ஸ்னே ரானா- பூஜா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசி, அடுத்தடுத்து அரைசதம்  கடந்திருந்து நிலையில், சிறப்பாக விளையாடிய பூஜா 67(59) ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஸ்னே ரானா 53(48) ரன்கள் எடுத்தார். மேலும் இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 122 ரன்களை சேர்த்ததால்,இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்களை எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராங்கனையான ஷித்ர அமீன் ஆட்டமிழக்காமல் இருக்க, மறுமுனையில் களமிறங்கிய  ஜவீரியா கான் 11(28) ரன்களிலும் ,பிஸ்மா மரூஃப் 15(25) ரன்களிலும், சொஹைல் 5(4) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேலும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஷித்ர அமீன் 21வது ஓவரில் 30(64) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நைடா டார் 4(10),ரியாஸ் 11(23) ஃபாத்திமா சனா 17(25),சிட்ரா நவாஸ் 12(19),டயானா 24(35),நஷ்ரா சந்து 0(5) என யாருமே பெரிய அளவில் ரன்கள் எடுக்காமல், தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 43வது ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் வெறும் 137 ரன்களுக்கு சுருண்டதால், 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது.

இதில் இந்திய அணி சார்பாக 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த ராஜேஸ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளையும்,ஜுலான் கோஸ்வாமி, ஸ்னே ராணா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.