பேர்ஸ்டோவ் மற்றும் ரூஸோவ் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-100203192
Sam Curran (c) of Punjab Kings celebrating win during match 49 of the Indian Premier League season 17 (IPL 2024) between Chennai Super Kings and Punjab Kings held at the MA Chidambaram Stadium, Chennai on the 1st May 2024. Photo by Saikat Das / Sportzpics for IPL

சென்னை: இந்தியவில் நடைபெற்று வரும்  17ஆவது ஐபிஎல் தொடரின் 49ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று பலப்பரீட்சை நடத்தியது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான  கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் -அஜிங்கியா ரஹானே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இந்நிலையில் 29(24) ரன்களைச் சேர்த்திருந்த ரஹானே ஹர்ப்ரீத் பிரார் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் யாரும் எதிர்பார்க்காதவகையில் ஷிவம் தூபே மூன்றாவது வீரராக களமிறங்கி தனது முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 2(4) ரன்கள் மட்டுமே எடுத்து ராகுல் சஹார் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அடுத்துவந்த இம்பேக்ட் வீரர் சமீர் ரிஸ்வி தொடர்ந்து ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த நிலையில் 21(23) ரன்களை மட்டுமே எடுத்து ககிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதேசமயம் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த கெய்க்வாட் தொடர்ச்சியாக தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இருப்பினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெய்க்வாட் 62(48) ரன்களைச் சேர்த்திருந்தபோது அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேற, தொடர்ந்து வந்த மொயின் அலியும் 15(9) ரன்களுடன் ராகுல் சஹார் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

இறுதியில் மகேந்திர சிங் தோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14(11) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். இதன்மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ் -பிரப்ஷிம்ரன் சிங் ஜோடியில் பிரப்ஷிம்ரன் சிங் 13(10) ரன்களின் போது  ரிச்சார்டு க்ளீசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அதன்பின் பேர்ஸ்டோவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரைலீ ரூஸோவ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 62 ரன்களைச் சேர்த்தனர். இந்நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோவ் 46(30) ரன்களுடன் ஷிவம் தூபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ருஸோவும் 43(23) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஷர்தூல் தாக்கூர் பந்தவீச்சில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவர்களைத் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஷஷாங்க் சிங்- கேப்டன் சாம் கரன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த சாம் கரன் 26(20) ரன்களையும், ஷஷாங்க் சிங் 25(26) ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்து அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம்  நடப்பு ஐபிஎல் தொடரில் 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ள பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

Be the first to comment on "பேர்ஸ்டோவ் மற்றும் ரூஸோவ் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது."

Leave a comment

Your email address will not be published.


*