இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு போன வருட பரிசுத் தொகையே இந்த வருடம் தான் கொடுக்கப்பட உள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் ரசிகர்களை சற்றே ஜெர்க் ஆக வைத்துள்ளது. கொரோனா 2வது அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக உள்ளது. தினம் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட, ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர். கோவிட் பெருந்தொற்று காரணமாக, பல நிறுவனங்களின் வருமானம் முடங்குவதால், பலரும் வேலையிழக்கின்றனர்.
இந்திய முழுக்க ஊரடங்கு நிலவுகிறது. இதனால் அன்றாட பிழைப்பை நம்பி இருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. சாமானியர்கள் தொடங்கி, சாதித்தவர்கள் வரை வருமானம், வாழ்வாதரம் என்பது பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கடந்த ஆண்டு பரிசுத் தொகை, இனிமேல் தான் வழங்கப்பட உள்ளதாம். அந்தளவுக்கு எங்களுக்கு வருமான நெருக்கடி என்கிறது பிசிசிஐ. கடந்த ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில், இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது.
இதனால் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய runner-up பரிசுத் தொகையான $500,000 இருந்து தங்கள் பங்கை வீராங்கனைகள் இந்த வார இறுதிக்குள் பெறுவார்கள் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு இன்னும் உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், “இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் இந்த வார இறுதிக்குள் தங்கள் பரிசுத் தொகையின் பங்கைப் பெறுவார்கள். இதற்கான பணப்பரிமாற்றம் தொடங்கிவிட்டது. அவர்கள் விரைவில் தங்கள் பங்கைப் பெறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தான் நாங்களே பரிசுத் தொகையை நாங்கள் பெற்றோம். அது தான் இந்த தாமதத்திற்கு காரணம்.
இது பெண்கள் அணிக்கு மட்டும் ஏற்பட்ட தாமதம் அல்ல. இது ஆண்கள் அணியின் central contract, சர்வதேச போட்டிக் கட்டணம், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் உள்நாட்டு போட்டிகளின் கட்டணம் என அனைத்து வித கட்டணங்களும், தற்போது நிலவும் மோசமான சூழ்நிலை காரணமாக தாமதமாகும். எனவே, இந்த விஷயத்தில் பிசிசிஐ எப்போது தொகை பெற்றது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த தாமதம் என்பது ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கும் ஒரே மாதிரியானது தான்” என்று முடித்தார்.
Be the first to comment on "பெண்கள் அணிக்கு மட்டுமல்ல.. ஆண்கள் அணிக்கும் “அதே” பிரச்சனை – பிசிசிஐ “பகீர்” தகவல்"