பும்ரா மற்றும் கோட்ஸி ஆகியோரின் அபார பந்துவீச்சில் வீழ்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10021142
Jasprit Bumrah of Mumbai Indians celebrates the wicket of Rilee Rossouw of Punjab Kings during match 33 of the Indian Premier League season 17 (IPL 2024) between Punjab Kings and Mumbai Indians held at the Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Mullanpur on the 18th April 2024. Photo by Arjun Singh / Sportzpics for IPL

சண்டிகர்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா -இஷான் கிஷான் ஜோடியில் இஷான் 8(8) ரன்களுடன் காகிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா -சூர்யகுமார் யாதவ் ஜோடியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சூர்யகுமார் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்ய, இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் விளாசினார். இந்நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 36 (25) ரன்களின்போது சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் 78(53) ரன்கள் எடுத்திருந்தபோது சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாட முற்பட்டு 10(6) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இறுதியில் திலக் வர்மா-டிம் டேவிட் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் டிம் டேவிட் 14(7) ரன்களுடனும், ரொமாரியோ ஷெஃபெர்ட் 1(2) ரன்னுடனும் ஹர்ஷத் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த திலக் வர்மா 34(18) ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் சாம் கரண் -பிரப்ஷிம்ரன் சிங் ஜோடியில் பிரப்ஷிம்ரன் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி ஜெரால்டு கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்துவந்த ரைலீ ரூஸோவ் 1(3) ரன்னிலும், கேப்டன் சாம் கரன் 6(7) ரன்னிலும் என அடுத்தடுத்து பும்ராவின் பந்துவீச்சில் நடையைக்கட்டினர்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் 1(2) ரன் மட்டுமே எடுத்து ஜெரால்டு  கோட்ஸிவிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ஹர்ப்ரீத் சிங் பாட்டியா-ஷஷாங்க் சிங் ஜோடியில் ஹர்ப்ரீத் சிங் 13(15) ரன்களுடன் ஷ்ரேயாஸ் கோபால் பந்துவீசெசில் ட்டமிழக்க, அடுத்துவந்த ஜிதேஷ் சர்மாவும் 9(9) ரன்களுடன் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷஷாங்க் சிங் -அஷுதோஷ் சர்மா ஜோடி வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 41(25) ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியைக் கைவிடாத அஷுதோஷ் சர்மா 23 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின்னரும் தொடர்ந்து அதிரடியைக் கைவிடாத அஷுதோஷ் சர்மா 61(28) ரன்களின்போது ஜெரால்டு கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இறுதியில் களமிறங்கிய ஹர்ப்ரீத் பிரார் 21(20) ரன்களின்போது ஹர்திக பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த காகிசோ ரபாடா முதல் பந்தையே சிக்ஸர் அடித்து மிரட்டினார். 

இதனால் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் காகிசோ ரபாடா 8(3) ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

Be the first to comment on "பும்ரா மற்றும் கோட்ஸி ஆகியோரின் அபார பந்துவீச்சில் வீழ்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணி."

Leave a comment

Your email address will not be published.


*