பிரித்வியை நம்புனதுக்கு சிறப்பா, தரமா செஞ்சிட்டாரு: கில்கிறிஸ்ட் ஓபன் டாக்!

இந்திய அணி தோல்வி குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244/10, ஆஸ்திரேலிய அணி 191/10 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டு, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டது இதுவே முதல்முறை. அதுமட்டுமல்ல, ஒரு இன்னிங்ஸில் 11 பேரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டும் எடுத்தது 1924ஆம் ஆண்டிற்குப் பின்பு இதுவே முதல்முறை. இந்த மோசமான தோல்வியை இந்திய அணி சந்திக்கக் காரணம் எது எனப் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டும் இதுகுறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தனியார் பத்திரிக்கை ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், பிரித்வி ஷா பேட்டிங் குறித்து விமர்சித்துப் பேசினார். “பிரித்வி ஷா துவக்க வீரருக்கான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளானதற்கு இது முதன்மை காரணம். பேட்டிற்கும், பேடிற்கும் இடையே அதிக இடைவெளியை அவர் காண்பிக்கிறார். இதனால்தான் இரண்டு இன்னிங்ஸிலும் விரைவில் ஆட்டமிழந்தார்.

“அவர் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். அணித் தேர்வாளர்கள் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை எனத் தோன்றுகிறது. இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் மற்றவர்களுக்கு வாய்ப்பு தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

சேத்தஸ்வர் புஜாரா முதல் இன்னிங்ஸில் விளையாடியதுபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் விளையாடியிருந்தால் இந்திய அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகரித்திருக்கும் எனப் பேசினார். “புஜரா முதல் இன்னிங்ஸில் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 160 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு பவுண்டரிகளுடன் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதை இரண்டாவது இன்னிங்ஸிலும் செய்திருந்தால் இந்திய அணி நிச்சயம் நல்ல ஸ்கோரை எட்டியிருக்கும். விராட் கோலி, அஜிங்கிய ரஹானே முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லும் வகையில் பதிவிட்டுள்ள பிரித்வி ஷா, “நாங்கள் முயற்சிக்கும் காரியங்கள் சில நேரங்களில் சொதப்பலாம். அதற்காக மக்கள் உங்களைக் கடுமையாக விமர்சிப்பார்கள். அதற்கு அர்த்தம், அந்த செயலை அவர்களால் செய்ய முடியாது. உங்களால் மட்டுமே செய்ய முடியும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி வருகிற 26ஆம் தேதி துவங்க உள்ளது.

Be the first to comment on "பிரித்வியை நம்புனதுக்கு சிறப்பா, தரமா செஞ்சிட்டாரு: கில்கிறிஸ்ட் ஓபன் டாக்!"

Leave a comment

Your email address will not be published.