பிசிசிஐ பழைய கறைகளை துடைத்து புதிய பாதையில் வழிநடத்துவேன், கங்குலி திட்டவட்டம்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கங்குலி, எல்லா வகையிலும் கேப்டன் விராட்கோலிக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறினார்.

மும்பை : பிசிசிஐ தலைவராக அதிகாரப் பூர்வமாக பதவியேற்ற கங்குலி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தோனி, விராட் கோலி உள்ளிட்டோர் குறித்த கேள்விகளுக்கு யோசிக்காமல் பதில் அளித்தார். பிசிசிஐ அமைப்பு மூன்று ஆண்டுகளாக நிர்வாக கமிட்டியால் மட்டுமே இயங்கி வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் சரியான முறையில் தலைவர், செயலாளர் என அமைப்பு ரீதியாக செயல்பட உள்ளது.

பிசிசிஐ மீது இருந்த பழைய கறைகளை துடைத்து புதிய பாதையில் வழிநடத்தும் பணியை ஏற்றுக் கொண்டுள்ளார் கங்குலி.

செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக மத்திய மந்திரி அனுராத் தாகூரின் தம்பியும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் துமாலும், இணைச்செயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம், துணைத் தலைவராக உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் மஹிம் வர்மாவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் 47 வயதான கங்குலி இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டியிலும், 311 ஒருநாள் போட்டியிலும் விளையாடி இருக்கிறார். ஆக்ரோஷமான கேப்டன் வர்ணிக்கப்பட்ட கங்குலி இந்திய அணியால் வெளிநாட்டு மண்ணில் வெற்றியை குவிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தவர். இந்திய கிரிக்கெட் அணி சூதாட்ட சர்ச்சையை சந்தித்த சமயத்தில் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வெற்றிகரமாக பயணிக்க வைத்த அவர் 2003-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜொலித்த கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அவதாரத்தில் வெற்றிகளை பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. லோதா கமிட்டி சிபாரிசின் படி மாநில மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. இதன்படி கங்குலியால் 9 மாதம் தான் தலைவராக நீடிக்க முடியும். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்த கங்குலியின் தலைவர் பதவி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைவதால் அப்போது புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். கங்குலிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Be the first to comment on "பிசிசிஐ பழைய கறைகளை துடைத்து புதிய பாதையில் வழிநடத்துவேன், கங்குலி திட்டவட்டம்"

Leave a comment

Your email address will not be published.


*