பிசிசிஐக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள்!

ஐபிஎல் நிர்வாகத்துக்கும் அணி உரிமையாளர்களுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

ஐபிஎல் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், பாதுகாப்பு விதிமுறைகளை இறுதி செய்வதில் நிர்வாகத்திற்கும், அணி உரிமையாளர்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பிரச்சனை நீடிக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்கத் தடையில்லாத நிலையில், வெளிநாட்டு வீரர்களுக்கு சில பிரச்சனைகள் உள்ளன. வீரர்களை ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதிக்குமாறு அந்தந்த நாடுகளுக்கு பிசிசிஐ சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா நாடுகள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் மற்ற நாடுகள் பரிசீலனை செய்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க, இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்குச் சீன நிறுவனத்தின் ஸ்பான்சர் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் அணி உரிமையாளர்களுக்கும், பிசிசிஐக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் நிர்வாகிகளுக்கு சங்கடமான நிலை உருவாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை (நேற்று) அன்று அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் தொலைபேசி மூலம் உரையாடினர். அப்போது, இந்த ஐபிஎல் சீசனில் ஏற்படும் இழப்பீடுகளுக்கு எந்த வழியில் ஈடுசெய்வது என்று அணி உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஒரு அணி உரிமையாளர் கோரிக்கை வைக்க, மற்றொரு அணி உரிமையாளரோ, சீன நிறுவன ஸ்பான்சரை தடை செய்ததால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க மற்றொரு ஸ்பான்சரை விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பல அணி உரிமையாளர்கள் வெளிநாட்டு வீரர்களை அழைத்து வரும்போது, மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “சீன நிறுவனத்தின் ஸ்பான்சருக்கு பதில் புதிய நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதனால், இதைப்பற்றி கவலை வேண்டாம். வீரர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து, அணி உரிமையாளர்கள் முன்வைத்துள்ள கோரிகைகள் பற்றிப் பரிசீலிக்கப்படும். வெளிநாட்டு வீரர்களுக்கு விதிமுறைகளை வகுத்த பின்பு, ஐபிஎல் குழுவினருக்கான கிருமித் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான உயிரி – பாதுகாப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

Be the first to comment on "பிசிசிஐக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*