பாகிஸ்தானுக்கு எதிரான சவாலான மோதலுக்கு முன்னதாக, அழுத்த சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பதை விராட் கோலியால் கற்றுக்கொடுக்க முடியும் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-1001200

பிரிஸ்பேன்: எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இத்தொடரின் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளன.

அதன்படி சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்ற இந்திய அணியானது வரும் அக்டோபர் 23-ஆம் தேதியன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் விளையாடவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இப்போட்டியை வெற்றியுடன் துவங்க இந்திய அணியின் பிளேயிங் லெவன் தயார் என கேப்டன் ரோஹித் ஷர்மா அறிவித்திருந்த வேலையில், தற்போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தான் ஆவலுடன் காத்திருப்பதாக ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் அணிக்கு எதிராக எப்போது விளையாடினாலும் அது ஒரு ஸ்பெஷலான ஆட்டமாகவே இருக்கும். இந்த போட்டி எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஒரு வித்தியாசமான உணர்வை தரும். அதுமட்டுமல்ல மக்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாம் விளையாடும் போது திருவிழா போன்று இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி நாங்கள் தோல்வியை தழுவினோம்.

அதிலும் குறிப்பாக அந்த போட்டியின் தொடக்கத்திலேயே சொற்ப ரன்களில் சில விக்கெட்டுகளை இழந்து ரன் ரேட் தொய்வடைய நேர்ந்ததால் அதிரடியாக விளையாட வேண்டும் என்று எண்ணி நானும் எனது விக்கெட்டை இழந்து விட்டேன். அதனால் இந்திய அணி அதிக ரன்கள் குவிக்க முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது. இருப்பினும் அதுபோன்ற சூழ்நிலைகள் தான் நமக்கு நிறைய பாடங்களை கற்றுத்தரும்.

அதிலும் குறிப்பாக விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் களத்திலிருக்கும்போது நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தருவார். அது நமது கிரிக்கெட் பயணத்தை முன்னோக்கிச் எடுத்துச்செல்ல உதவும். எனவே அவருடன் எப்போதும் போல் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கிறது. இம்முறை இந்த சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு நிச்சயம் ரன்களை குவிக்க காத்திருக்கிறேன்” இவ்வாறு ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க வாய்ப்புள்ளதால், இந்திய அணியின் ஆடும் லெவனில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் களமிறக்க ரோஹித் சர்மா திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Be the first to comment on "பாகிஸ்தானுக்கு எதிரான சவாலான மோதலுக்கு முன்னதாக, அழுத்த சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பதை விராட் கோலியால் கற்றுக்கொடுக்க முடியும் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*