பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தியது: கடைசி பந்தில் சிக்சர் அடித்து பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து திரில் வெற்றியை பெற்றது.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி தேவ்தத் படிக்கல்லும், ஆரோன் பிஞ்சும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். பிஞ்ச்-படிக்கல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் திரட்டி உடைந்தது. தேவ்தத் படிக்கல், அர்ஷ்தீப்சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி வந்தார்.
3-வது விக்கெட்டுக்கு வழக்கத்துக்கு மாறாக வாஷிங்டன் சுந்தர் களம் அனுப்பப்பட்டார். 13 ரன் எடுத்த அவர் பந்தை சிக்சருக்கு விரட்ட முயற்சித்து ஆட்டம் இழந்தார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் விராட் கோலியாலும் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினார். இதனால் ரன்வேகம் கொஞ்சம் குறைந்தது.

இதன் பின்னர் சூறாவளி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் இறங்கினார். தாமதமாக வந்தாலும் சிறிய மைதானத்தில் வாணவேடிக்கை நிகழ்த்தப்போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பெங்களூரு அணிக்கு அதிர்ஷ்டவசமாக ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் கைகொடுத்தார். . 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 172 ரன்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வாலும், கேப்டன் லோகேஷ் ராகுலும் கலக்கலாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்து அட்டகாசமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். மயங்க் அகர்வால் 45 ரன்களில் (25 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) போல்டு ஆனார். இதைத் தொடர்ந்து கிறிஸ் கெய்ல் இறங்கினார். இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் முதல்முறையாக களம் கண்ட கெய்ல் ஓரிரு ஓவர்களை சமாளித்த பிறகு தனது கைவரிசையை காட்டினார். வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் 2 சிக்சர்களை கிளப்பினார். இன்னொரு பக்கம் லோகேஷ் ராகுலும் ஏதுவான பந்துகளை தெறிக்க விட்டார். இதனால் பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. கெய்ல் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 2 ரன் மட்டுமே தேவைப்பட்டது. இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வீசினார். கடைசி பந்தில் பஞ்சாப்புக்கு ஒரு ரன் தேவையாக இருந்தது. புல்டாசாக வந்த கடைசி பந்தை சந்தித்த நிகோலஸ் பூரன் சிக்சருக்கு தூக்கியடித்து வெற்றிக்கனியை பறித்தார்.

Be the first to comment on "பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தியது: கடைசி பந்தில் சிக்சர் அடித்து பஞ்சாப் அணி வெற்றி"

Leave a comment

Your email address will not be published.