பகலிரவு டெஸ்டில் வார்னர் நீக்கம்: ஆஸி கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் காயத்தில் இருந்து குணமாகாததால் இந்தியாவுக்கு எதிரான 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடவில்லை.

இந்தியா, ஆஸ்திரேலியா பங்கேற்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. முதல் டெஸ்ட் அடிலைட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள நிலையில், காயத்தால் அவதிப்பட்டு வரும் டேவிட் வார்னர் அப்போட்டியில் நீக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி சிட்னியில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த டேவிட் வார்னருக்கு எதிர்பாராத விதமாக இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவரைப் பரிசோதித்த டாக்டர் சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மூன்றாவது ஒருநாள், டி20 தொடர்களில் வார்னர் பங்கேற்கவில்லை. தற்போது, முதல் டெஸ்ட் (பகலிரவு) போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, இதுகுறித்து பேசிய வார்னர், “நான் காயத்திலிருந்து வேகமாகக் குணமடைந்து வருகிறேன். சிட்னியில் தங்கி மீண்டும் பழைய நிலை அடையப் பயிற்சி மேற்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் குடும்பத்தில் சிலருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரும் டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. முதல் டெஸ்டில் களமறிங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். முதல் டி20 போட்டியில் அவர் பேட்டிங் செய்யும்போது ஸ்டார்க் வீசிய பந்து ஹெல்மட்டில் பட்டது, அதனைத் தொடர்ந்து தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் அவதிப்பட்டார். இதனால், ஜடேஜா களமிறங்குவதும் கேள்விக்குறியாக உள்ளது. இருதரப்பும் காயம் காரணமாக முக்கிய வீரர்கள் இல்லாமல் முதல் டெஸ்ட் (பகலிரவு) போட்டியில் விளையாட உள்ளதால் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 எனவும், டி20 தொடரை இந்திய அணி 2-1 எனவும் கைப்பற்றி சம பலத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய ஏ அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய ஏ அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த அணியில் தொடக்கவீரர் ஜோபர்ன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Be the first to comment on "பகலிரவு டெஸ்டில் வார்னர் நீக்கம்: ஆஸி கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!"

Leave a comment

Your email address will not be published.