நேர்த்தியான யார்க்கரால் மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: 13 ரன்னில் இந்தியா ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியா – இந்தியா மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதேபோல் அவருக்கு இணையாக அதிரடி காட்டிய ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 150 ரன்கள் குவித்தது இந்தியாவுக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக இருந்தது

இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் – லாபஸ்சேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லாபஸ்சேன்-ஐ க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் டி நடராஜன். இதனால் 6 ஓவருக்குள் ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித் ஷர்துல் தாகூர் பந்தில் வீழ்ந்தார்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் இருவர் வெளியேற ஆஸ்திரேலியா திணற ஆரம்பித்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடினார். அவர் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹென்ரிக்ஸ் 22, க்ரீன் 21 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் ஆஸ்திரேலியா தோல்வியை நோக்கிச் சென்றது.
43-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. 45-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை மேக்ஸ்வெல் சந்தித்தார். பும்ரா புயல் வேகத்தில் யார்க்கராக வீசிய பந்தை மேக்ஸ்வெல்லால் கணிக்க முடியவில்லை. இதனால் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அதன்பின் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. கடைசி 3 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை நடராஜன் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 4 ரன்களே விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் 49-வது ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் பும்ரா விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் தொடரை வென்றது. இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது.

Be the first to comment on "நேர்த்தியான யார்க்கரால் மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: 13 ரன்னில் இந்தியா ஆறுதல் வெற்றி"

Leave a comment

Your email address will not be published.