நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி, முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வி

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் 25ம் தேதி வரை மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் வரிசை ஆட்டக்காரர்கள் அதிக அளவில் ரன் ஏதும் எடுக்கவில்லை. கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் 51 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் வாட்லிங் மற்றும் காலின் டி க்ரோம் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். காலின் டி க்ரோம் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மிட்செல் சாண்ட்னெர் வாட்லிங்குடன் கைகோர்த்தார். 

தடுப்பாட்டத்தில் ஈடுபட்டாலும் இருவரும் ரன் குவிப்பத்திலும் கவனம் செலுத்தினர். சிறப்பாக விளையாடிய வாட்லிங் இரட்டைச்சதம் விளாசி அசத்தினார். சாண்ட்னெரும் தனது பங்கிற்கு சதம் விளாசினார். இவர்களின் உதவியால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. வாட்லிங் 206 ரன்களும், சாண்ட்னெர் 126 ரன்களும் குவித்து அவுட் ஆகினர். இதையடுத்து 9 விக்கெட் இழப்பிற்கு 615 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் கேன் வில்லியம்சன் அறிவித்தார். 

அதன் பின்னர் 262 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த நிலையில் 197 ரன்களில் அந்த அணி ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ டென்லி 35 ரன்கள் எடுத்தார். 

இதன் மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் நெய்ல் வாக்னர் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இரட்டைச்சதம் அடித்த விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், ‘டாஸ்சை நாங்கள் இழந்ததுடன், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன்களுக்கு மேல் எடுத்ததால் நாங்கள் ஏதாவது ஒருவகையில் சிறப்பாக செயல்பட வேண்டியது தேவையானதாக இருந்தது. நாங்கள் முதல் இன்னிங்சில் 600 ரன்களுக்கு மேல் குவித்ததால் கடைசி இன்னிங்சில் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது.

Be the first to comment on "நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி, முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வி"

Leave a comment