நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. சரிவில் இருந்து எழுச்சி பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

கிறைஸ்ட்சர்ச்:

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

முதலாவது டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியா 200 ரன்களை கூட (165 மற்றும் 191 ரன்) தொடவில்லை. மயங்க் அகர்வால், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆடினர். மற்றவர்கள் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் சரணாகதியானார்கள்.

இந்த ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது தான். ஏற்கனவே டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி அச்சுறுத்திய நிலையில் ‘ஷாட்பிட்ச்’ மன்னன் நீல் வாக்னெரும் நியூசிலாந்து அணியுடன் இணைந்துள்ளார். இவர்களின் புயல்வேக தாக்குதலுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுத்து ஆடுவதை பொறுத்தே ஸ்கோரின் போக்கு அமையும்.

இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அவர் பயிற்சிக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. பேட்டிங்கை வலுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை நீக்கிவிட்டு, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்கிறது. கேப்டன் விராட் கோலி கடைசியாக ஆடிய 20 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலியின் தடுமாற்றமும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நாம் இன்னும் அதிக ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஆனால் மனஉறுதியும், தெளிவான மனநிலையும் இருந்தால் போதும். அதுவே உதவிகரமாக இருக்கும். வெலிங்டனில் நடந்ததை நாம் மறக்க வேண்டும்.

Be the first to comment on "நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்"

Leave a comment

Your email address will not be published.


*