நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது ஒரு நாள் போட்டி சனிக்கிழமை நடக்கிறது

இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில்  சனிக்கிழமை நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இந்திய அணியினர் பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர்.

தொடக்க ஆட்டத்தை எடுத்துக் கொண்டால் ஸ்ரேயாஸ் அய்யரின் செஞ்சுரி (103 ரன்), கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் இந்தியா 347 ரன்கள் குவித்தது. ஆனால் பந்து வீச்சில் சொதப்பி விட்டனர். இந்த இமாலய இலக்கை நியூசிலாந்து 11 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து சாதனை படைத்தது. அந்த அணியிலும் ஒரு சதம் (ராஸ் டெய்லர்), 2 அரைசதங்கள் (நிகோல்ஸ், டாம் லாதம்) பதிவாகின. 34 முதல் 41 ஓவர்கள் இடைவெளியில் இந்திய பவுலர்கள் மொத்தம் 111 ரன்களை வாரி வழங்கியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டியது அவசியமாகும். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 84 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் அவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்படலாம்.

இந்த மைதானமும் சிறியது தான். குறிப்பாக நேர்பகுதி பவுண்டரி தூரம் 56 மீட்டர் மட்டுமே கொண்டது. அதனால் பந்தை கணித்து விளையாடினால் ரன் வேட்டை நடத்தலாம்.

இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் இதற்கு முன்பு இரண்டு முறை ஒரு நாள் தொடரை வசப்படுத்தி இருக்கிறது. அதே சமயம் அங்கு தொடரின் முதல் ஆட்டத்தில் தோற்று அதன் பிறகு மீண்டு வந்ததில்லை. அந்த வரலாற்றை நமது அணி மாற்றி அமைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போதைய பயணத்தில் இந்திய அணி தனது முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டத்தை இதே ஆக்லாந்தில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றது. அதில் ஒரு ஆட்டத்தில் 204 ரன்கள் இலக்கை ‘சேசிங்’ செய்து மிரட்டியது. இது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

Be the first to comment on "நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது ஒரு நாள் போட்டி சனிக்கிழமை நடக்கிறது"

Leave a comment

Your email address will not be published.


*