நியூசிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0039

நியூ டெல்லி:டி20 உலகக் கோப்பை  2021 தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்லாமல் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. இதைத் தொடர்ந்து  செவ்வாய்க்கிழமையான நேற்று பிசிசிஐ 16 பேர் கொண்ட டி20 அணியை மூன்று டி20ஐ போட்டிகள்  கொண்ட தொடரில் நியூசிலாந்து  அணிக்கு எதிராக  பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

வரும் நவம்பர் 17 ஆம் தேதி இத்தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ள நிலையில்  இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக கே. எல். ராகுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் டி20 உலகக் கோப்பையை போல் இந்த தொடரிலும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும் ஆல்ரௌண்டர் ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ஷமி உள்ளிட்டவர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட், அதிக விக்கெட்டுகளை எடுத்த ஹர்ஷல் பட்டேல் இவர்களுடன் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர்  இத்தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.  இந்திய மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான டி20ஐ தொடரின் முதல் போட்டி வரும் 17ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்  விளையாட்டரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

இதை தொடர்ந்து இரண்டாவது போட்டி 19ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ மைதானத்திலும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி  21ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும்  நடைபெறவிருக்கிறது.  நடப்பு உலகக் கோப்பை தொடருடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளதை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

 அதேபோல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் நடப்பு உலகக் கோப்பையுடன் நிறைவடைந்துள்ளதால் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இத்தொடரின் மூலம் முதல் முறையாக செயல்பட உள்ளார். மேலும் இத்தொடரில் இளம் வீரர்கள் பலர் உள்ள நிலையில் ராகுல் டிராவிட் இவர்களை எப்படி போட்டிக்கு மெருகேற்றுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .

இத்தொடரில் ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), வெங்கடேஷ் ஐயர் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், ஹர்சல் பட்டேல், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சாஹல், அவேஸ் கான், தீபக் சாஹர், முகமது சிராஜ், அக்சர் பட்டேல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து பிசிசிஐ எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

Be the first to comment on "நியூசிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*