நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை என்று ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034889

மும்பை: ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பிறகு இன்றுவரை ஒருமுறை கூட வெற்றிபெற முடியவில்லை. இதனால் இந்தமுறை ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கவுள்ள இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யார் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாகவும் 4வது வீரராக வரிசையில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்விக்கு, கடைசி வரை இந்திய அணி விடைதெரியாமல் இருந்தது. அதேபோல் ஒரு ஆட்டத்தை தான்  பிசிசிஐ மீண்டும் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில், “நம்பர் 4 பேட்ஸ்மேன் யார் என்பதில் இந்திய அணிக்கு நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதிலிருந்து இந்திய அணியின் முக்கியமான 4ஆம் இடத்தில் களமிறங்க எந்த வீரரும் அமையவில்லை. ஆனால் நீண்ட நாட்களாக அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார். அவர் இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 47.35 சராசரியுடன் 2 சதங்கள் உட்பட 805 ரன்களை விளாசி இருக்கிறார். இருப்பினும், காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வருவதால், 4ஆவது இடம் மீண்டும் காலியாக இருக்கிறது.

கடந்த 4, 5 ஆண்டுகளாக இதுதான் நிலைமையாக உள்ளது. ஏராளமான வீரர்கள் காயமடையும் போது, 4ஆம் இடத்தில் புதிய வீரர்கள் விளையாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. நான் கேப்டனாக இல்லாத போதும் கூட 4ஆம் இடத்தில் களமிறங்கும் பேட்டர்களை கவனித்து வந்திருக்கிறேன். நிறைய வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருக்கிறார்களே தவிர, நிரந்தர வீரர்கள் கிடைப்பதில்லை. சில நேரங்களில் அவர்கள் காயமடைகிறார்கள் அல்லது ஃபார்மில்லாமல் அணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

இந்திய அணியில் விளையாடுவதற்கு ஏராளமான வீரர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது. ஆனால், ஐசிசி உலகக்கோப்பைத் தொடரை பொறுத்தவரை எந்த காம்பினேஷன் சரியானது என்பது பற்றி ஆலோசிப்போம். நான் உட்பட யாருமே நேரடியாக தேர்வு செய்யப்பட போவதில்லை. ஏனெனில் இந்திய அணியில் யாருக்கும் நிரந்தர இடமில்லை. சில வீரர்கள் நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் இடம்பெற போகிறார்காள் என்பது அனைவருக்கும் தெரியும். அதேசமயம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் சில வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

உலகக்கோப்பைத் தொடருக்கு முன் ஆசியக்கோப்பை தொடர் இருப்பதையும் நாங்கள் மறக்கவில்லை. அந்த தொடரிலும் சிறந்த அணிகளை நாம் எதிர்கொள்ளப் போகிறோம். அதனால் இளம் வீரர்களின் செயல்பாடுகள் அதிலும் கூர்ந்து கவனிக்கப்படும்” இவ்வாறு ரோஹித் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை என்று ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*