தோனி : ”சிஎஸ்க வீரர்கள் எல்லோரும் வீடு போய் சேர்ந்தபிறகுதான் நான் என் வீட்டுக்குப்போவேன்!”

சென்னை அணி வீரர்களுக்காக கேப்டன் எம்.எஸ்.தோனி, கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி செய்துள்ள ஒரு விஷயம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து வீரர்களையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் தாய் நாடு திரும்ப முடியாத நிலையில், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேச வீரர்கள் ஏற்கனவே தாய் நாட்டிற்கு கிளம்பிவிட்டனர். இந்திய வீரர்களுக்காக் மும்பை, சென்னை, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளன. ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் அணி வீரர்கள் பொதுமக்கள் பயணிக்கும் விமானங்கள் மூலமாக வீடுகளுக்கு சென்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் அனைத்து வீரர்களும், ஊழியர்களும் வீட்டிற்கு சென்று சேர்ந்தவுடன் தான், நான் வீட்டிற்கு கிளம்புவேன் என எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார். அயல்நாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்குதான் விமானங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் இந்திய வீரர்கள் அதன்பின்னர் செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், அணி வீரர்களுடன் கேப்டன் தோனி வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அதில் அயல்நாட்டு வீரர்கள் முதலில் கிளம்பிய பிறகு இந்திய வீரர்கள் விமானங்களில் ஏற வேண்டும். அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வீடுகளுக்கு சென்ற செய்தியை கேட்ட பிறகு தான், ஹோட்டலில் இருந்து நான் கிளம்பி கடைசி ஆளாக விமானம் ஏறுவேன் என தோனி திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.

சிஎஸ்கே அணி இந்திய வீரர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது. 10 பேர் அமரக்கூடிய அந்த விமானத்தில் நேற்று காலை ராஜ்கோட் மற்றும் மும்பையை சேர்ந்த வீரர்கள் சென்றுவிட்டனர். மாலையில் சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்த வீரர்கள் சென்றுவிட்டனர். சென்னையில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் சாம் கரண் மற்றும் மொயின் அலி நேற்று காலை லண்டன் சென்றுவிட்டார்கள். அதேப்போல் டுப்ளெஸ்ஸி, எங்கிடி, இம்ரான்தாஹிர், பெளலிங் பயிற்சியாளர் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுவிட்டனர். பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் நியூஸிலாந்து செல்கிறார்.

கேப்டன் எம்.எஸ்.தோனி அனைத்து வீரர்களும் வீடுகளுக்கு சென்ற பிறகு, நாளை மாலை தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு செல்ல விமானம் ஏறவுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக அனைத்து வீரர்களும் அவசர அவசரமாக கிளம்பி வரும் நிலையில் கேப்டனாக தோனி செய்துள்ள இந்த விஷயம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

Be the first to comment on "தோனி : ”சிஎஸ்க வீரர்கள் எல்லோரும் வீடு போய் சேர்ந்தபிறகுதான் நான் என் வீட்டுக்குப்போவேன்!”"

Leave a comment

Your email address will not be published.


*