தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இந்த இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10050213

மும்பை: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஆனால் இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அந்த டெஸ்ட் போட்டியில் கொஞ்சம் கூட போராடாத இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் கனவாகவே மாறியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படுதோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 6வது இடத்துக்கு சரிந்து பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

ஆகையால் இந்திய அணி தங்களது கௌரவத்தை காப்பாற்ற இத்தொடரை குறைந்தபட்சம் சமன் செய்து 2வது டெஸ்ட் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் மோசமான  தோல்வியை சந்தித்த இந்திய அணியில் கண்டிப்பாக சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேப் டவுனில் நடைபெறவிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்து விட்டால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாகவும், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக முகேஷ் முகேஷ் குமாரையும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர், “ரவீந்திர ஜடேஜா முழுமையாக ஃபிட்டாகி விட்டால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று நம்புகிறேன். ஏனெனில் அவரால் இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்த முடியும். அதேசமயம் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக முகேஷ் குமார் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்.

பொதுவாக கேப் டவுனில் காற்று சற்று வேகமாக இருக்கும். அதனால் அந்த ஆடுகளத்தில் பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகும். எனவே அங்கு பந்தை காற்றில் ஸ்விங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் வெற்றிகரமாக செயல்படுவார்கள். அதற்கு முகேஷ் குமார் நல்ல தீர்வாக இருப்பார் என்று நம்புகிறேன்” இவ்வாறு சுனில் கவாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இந்த இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*