தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-100144

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் பந்துவீச்சுக்கு சாகதமான திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டதன் மூலம், இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதனையடுத்து அக்டோபர் 2ஆம் தேதியன்று கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பேட்டர்களுக்கு சாதகமாக பிட்ச் இருந்ததால்,கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. இருப்பினும் இந்தியப் பந்துவீச்சாளர்களின் சொதப்பல் காரணமாக வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்திய மண்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளதை தொடர்ந்து, மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது அக்டோபர் 4 ஆம் தேதியான இன்று இந்தூரில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே இத்தொடரை இந்திய அணி கைப்பற்றியதால், டி20 உலகக்கோப்பையில் ஆடும் லெவனில் விளையாடவிருக்கும் விராட் கோலி, சூர்யக்குமார் யாதவ் கே.எல்.ராகுல் ஆகிய முக்கியமான வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக நீண்டநாள் ஓய்விற்கு பிறகு ஆசிய கோப்பை தொடருக்கு திரும்பிய விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 122(66) ரன்கள் குவித்தார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக தனது ஃபார்ம் மீதான அனைத்து சந்தேகங்களையும் துடைத்துள்ள கோஹ்லி ஓய்விற்கு பிறகு விளையாடியுள்ள 10 போட்டிகளில் 3 அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 404 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

அதேபோல ஆகஸ்ட் மாதம் காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுலும் அதன்பிறகு நடைபெற்ற அனைத்து இந்தியப் போட்டிகளிலும் கலந்து கொண்டார். இருப்பினும் முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் கடந்த சில போட்டிகளில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், தற்போது ஆறு இன்னிங்ஸ்களில் நான்கு அரை சதங்களை அடித்ததன் மூலம், மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார்.

எனவே டி20 உலகக் கோப்பை துவங்க இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், மூன்று நாட்கள் ஓய்விற்கு பிறகு அக்டோபர் 6ஆம் தேதியன்று டி20 உலகக் கோப்பை செல்லும் இந்தியா அணியுடன் விராட் கோலி,கே.எல்.ராகுல் ஆகியோர் இணைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Be the first to comment on "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*