தென்னாப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்புள்ளது என்று சேட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-052

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதில், முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற  டிசம்பர் 26-ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

மும்பையில் 3 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த இந்திய வீரர்கள், தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பயிற்சிக்கு பிறகு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரர் புஜாரா, “கடந்த 3-4 ஆண்டுகளில் ஐசிசி போட்டியில்  இந்திய அணியால் வெற்றிபெற முடியாமல் போனாலும் கடந்த 2 ஆணடுகளில் ,ஆஸ்திரேலியா தொடரிலும் சரி , இங்கிலாந்து தொடரிலும் சரி எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வரலாற்று வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர்.

குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில்,ஆஸ்திரேலியாவுக்கு 33 ஆண்டுகளாக கோட்டையாக இருந்த கபா மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தியது.அதேபோல, இம்முறையும் பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள் ” என்று கூறினார்.

மேலும், “எங்கள் வேக பந்துவீச்சாளர்கள் தான் எங்கள் பலம். அயல்நாடுகளில் குறிப்பாக,ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற சீமிங் சூழ்நிலைகளில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் அவர்களால் இதைச் செய்ய முடியாது என்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்பதால்,தென்னாப்பிரிக்க ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப  பந்துவீசுவார்கள். ஒரு போட்டியின் 20 விக்கெட்களையும் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களே பெற்றுவிடும் அளவுக்கு அவர்கள் திறமை கொண்டவர்கள்.

மேலும், தென்னாப்பிரிக்காவில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைகூட இந்தியா வென்றதில்லை, இருப்பினும் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இப்போது விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால், இந்தியா ஒரு வரலாற்றை உருவாக்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. அதிலும்,  கடந்த 6 மாதத்திற்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா விளையாடவில்லை.

ஆனால், நாங்கள் தற்போது தான் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துடன் விளையாடி 1-0 என்ற கணக்கில் போட்டியை கைப்பற்றினோம். இதனால் மனதளவிலும், உடலளவிலும் டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர்,போட்டிக்கு எங்களை தயார் செய்யதுகொள்ள போதுமான நேரம் உள்ளது என்பதால் தென்னாப்பிரிக்க தொடரை முதல் முறையாக வெல்ல இதுவொரு நல்ல வாய்ப்பு” என்று புஜாரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், தொடைதசை காயம் காரணமாக ரோஹித் ஷர்மா டெஸ்ட் தொடரிலிருந்து விலகி, அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக கேஎல் ராகுலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு சனிக்கிழமையன்று நியமித்தது குறிப்பிடத்தக்கது.