ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்குவது இன்னும் உறுதியாகவில்லை. துவக்க வீரர்களான இருவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்ய முடியாத அளவுக்கு காயம் அடைந்தனர்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய 1-0 என முன்னிலையில் இருந்தது. இதன் இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டியில் இன்று நடந்தது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கடைசி மோதல்
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்தது. இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (19/01/20) பெங்களூருவில் நடக்கிறது. ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் 43வது ஓவரில் பீல்டிங் செய்த போது கீழே விழுந்தார். அப்போது அவரது இடது கை தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.
களமிறங்கிய ஜாதவ்
இந்நிலையில் இந்த காயத்தால் வலியால் துடித்த ரோஹித் ஷர்மா மைதானத்தில் அப்படியே சுருண்டு விழுந்தார். இதன் பின் பிஸியோ நிதின் படேலுடன் மைதானத்தை விட்டு வெளியேறி பெவிலியனில் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டார் ரோஹித் ஷர்மா. இவருக்கு பதிலாக கேதர் ஜாதவ் மாற்று வீரராக களமிறங்கினார்.
தவனும் காயம்
முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்த போது இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவனுக்கு, பாட் கம்மின்ஸ் வீசிய பவுண்சர் விலா எலும்பில் பலமாக தாக்கியது. இதனால் தவன் பீல்டிங் செய்ய களமிறங்கவில்லை. இவருக்கு மாற்று வீரராக சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பீல்டிங் செய்தார்.
கோலி ஆறுதல்
ரோஹித் ஷர்மாவின் காயம் குறித்து போட்டிக்கு பின் பேசிய கேப்டன் கோலி கூறுகையில், “பீல்டிங் செய்யும் போது சில நேரத்தில் தோள்பட்டை காயம் ஏற்படுவது சர்வ சாதாரணம் தான். ரோஹித்துக்கு இடது தோள்ப்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அடுத்த போட்டிக்கு முன் ரோஹித் நிச்சயமாக குணமடைந்து பங்கேற்பார்” என்றார்.
Be the first to comment on "தரையில் மோதி காயமடைந்த ரோஹித் சர்மா மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவன் … அடுத்த போட்டியில் சந்தேகம்!"