டோனி விரும்பும் வரை சென்னை அணிக்காக விளையாடலாம் – என். சீனிவாசன் பேட்டி

2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்று கொடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கியவரான 39 வயது டோனி கடந்த சனிக்கிழமை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் மவுனம் காத்து வந்த அவரின் திடீர் ஓய்வு முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் மோசமான தோல்வி காரணமாக அடுத்து வந்த தொடரில் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க தேர்வாளர் ஒருவர் முயற்சி செய்ததாகவும் அதனை தான் தடுத்தி நிறுத்தியதாகவும் அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான என்.சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நமது அணி சிறப்பாக விளையாடவில்லை. எனவே தேர்வாளர் ஒருவர் டோனியை ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பினார். டோனியை எப்படி ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடியும். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நமது அணி அவரது தலைமையில் உலக கோப்பையை வென்று இருந்தது.

டோனிக்கு பதிலாக யாரை கேப்டனாக தேர்வு செய்வது என்பது குறித்து கூட தேர்வு குழுவினர் சிந்திக்கவில்லை. இது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்வு குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக டோனியை அணியில் ஒரு வீரராக மட்டும் தேர்வு செய்ய வழியில்லை என்று நான் தெரிவித்தேன். தேர்வு குழு கூட்டத்தில் டோனியை கேப்டனாக தேர்வு செய்ய தேர்வாளர்கள் மறுக்கிறார்கள் என்று வாரியத்தின் செயலாளராக இருந்த சஞ்சய் ஜக்தலே எனக்கு தகவல் தெரிவித்தார்.

டோனி விரும்புகிற காலம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம். தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும்.

Be the first to comment on "டோனி விரும்பும் வரை சென்னை அணிக்காக விளையாடலாம் – என். சீனிவாசன் பேட்டி"

Leave a comment

Your email address will not be published.


*