டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயங்கினேன் – குல்தீப் யாதவ்!

Kolkata: India's bowler Kuldeep Yadav celebrates his hat trick against Australia during 2nd ODI cricket match at Eden Garden in Kolkata on Thursday. PTI Photo by Ashok Bhaumik (PTI9_21_2017_000201B) *** Local Caption ***

2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தர்மசலா மைதானத்தில் களம் கண்டது. தனது முதல் டெஸ்ட் போட்டியில் பலம் மிக்க ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகப் பந்துவீச ஆயத்தம் ஆனார் குல்தீப் யாதம். அப்போது யார் என்ன பேசினார்கள், என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி எதுவும் தெரியாதவனாய் களத்திற்குச் சென்றேன் என்கிறார் அவர்.

தனது முதல் டெஸ்ட் போட்டி தொடர்பாக மனம் திறந்த அவர், ”எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், தயக்கத்துடன்தான் அப்போது நான் இருந்தேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கக் கூட நான் விரும்பவில்லை. இப்போட்டி என் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக இருக்கப்போவது நிச்சயம் என்பது மட்டும் எனக்குத் தெரியும்” என்கிறார்.

பிசிசிஐ சார்பில் இணையதளம் வழியாக நடத்திய நிகழ்ச்சியில் குல்தீப் யாதவ் இதைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாயங்க் அகர்வால், யுஷ்வேந்திர சாஹல் போன்ற வீரர்களும் கலந்து கொண்டனர். “இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கனவு. அக்கனவு அன்று நனவானது. முதல் போட்டியின் முதல் நாளில் நான் விக்கெட் வீழ்த்தினேன். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்” என்று குல்தீப் தெரிவித்தார்.

குல்தீப் யாதவ் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இப்போட்டியில் வெற்றிபெற குல்தீப் யாதவ் முக்கியப் பங்கு வகித்தார். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது தொடர்பாகவும் குல்தீப் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். குறிப்பாக இரண்டாவது ஹாட்ரிக் வீழ்த்திய நிகழ்வு அற்புதமானது என்று கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அதுபற்றி கூறிய அவர் ”எனது வாழ்வின் மிக முக்கியமான சாதனை என்று அதைக் குறிப்பிடுவேன். அப்போட்டியின் போது, உலகக் கோப்பைக்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பின் விளையாடுவது போல் நானும் சாஹலும் உணர்ந்தோம். பின்வரிசை ஆட்டக்காரர்கள் களத்திலிருந்ததால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

இந்நிகழ்ச்சியில் சாஹல் செய்த குறும்புத்தனங்கள் பற்றியும் நகைச்சுவை உணர்வுடன் குல்தீப் பகிர்ந்து கொண்டார். ஊரடங்கு காலத்தில் செய்த வேலைகள் பற்றியும், வீட்டில் எவ்வாறு நேரத்தைச் செலவிடுகின்றனர் போன்ற பல்வேறு நிகழ்வுகள் பற்றியும் மலர்ந்த முகத்துடன் இந்நிகழ்ச்சியில் குல்தீப், மாயங்க், சாஹல் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.

Be the first to comment on "டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயங்கினேன் – குல்தீப் யாதவ்!"

Leave a comment

Your email address will not be published.