டெல்லி அணியைக் கதறவிட்ட பௌலர்கள்…வெற்றிக் கணக்கை தொடங்கிய ஹைதராபாத்!

பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்ஸ்மேன்களை திணறடித்ததால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. டெல்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்களை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த பார்ட்னர்ஷிப் 9.3 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த நிலையில் டேவிட் வார்னர் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இறுதியில் பேர்ஸ்டோ 53 ரன்கள் எடுத்தும், வில்லியம்சன் 41 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழந்தனர். புதுமுக வீரர் அப்துல் சமது கடைசி நேரத்தில் 7 பந்துகளுக்கு 12 ரன்கள் சேர்த்ததால், ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்களை கைபற்றி 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியளித்தது. பிரித்வி ஷா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷிகர் தவனும், ஸ்ரேயஸ் ஐயரும் பௌலர்களை எதிர்கொள்ள திணறினர். ஸ்ரேயஸ் ஐயர் 21 பந்துகளுக்கு 17 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவன் முடிந்தவரைப் போராடி 31 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

கடைசி கட்டத்தில் ரிஷப் பந்த், ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி காட்ட முயற்சித்தனர். இருப்பினும், ஹைதராபாத் அணியின் வலுவான பந்து வீச்சு காரணமாக ஹெட்மயர் 12 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 28 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் டெல்லி கேபிடல்ஸ் அணி 147 ரன்கள் மட்டும் சேர்த்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ரஷீத் கான் 4 ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அதேபோல், புவனேஸ்வர் குமாரும் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார்.

Be the first to comment on "டெல்லி அணியைக் கதறவிட்ட பௌலர்கள்…வெற்றிக் கணக்கை தொடங்கிய ஹைதராபாத்!"

Leave a comment

Your email address will not be published.


*