டெல்லி அணியின் அபார பந்துவீச்சால் குஜராத் டைட்டன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

www.indcricketnews.com-indian-cricket-news-10034486
Hardik Pandya of Gujarat Titans looks on after playing a shot during match 44 of the Tata Indian Premier League between the Gujarat Titans and the Delhi Capitals held at the Narendra Modi Stadium in Ahmedabad on the 2nd May 2023 Photo by: Faheem Hussain/ SPORTZPICS for IPL

அகமதாபாத்: 16ஆவது ஐபிஎல் தொடரின் 44வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வசெய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர் -பிலீப் சால்ட் ஜோடியில் பிலீப் ஆட்டத்தின் முதல் பந்திலேயே முகமது ஷமியிடம் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் வார்னர் 2(2) ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸொவ் 8(6), மனீஷ் பாண்டே 1(4), பிரியம் கார்க் 10(14) ஆகியோர் முகமது ஷமி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆனால் அதன்பின் களமிறங்கிய அமன் கான் -அக்ஸர் படேல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் 27(30) ரன்கள் சேர்த்திருந்த அக்ஸர் மோஹித் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ரிபேல் படேலுடன் இணைந்த அமன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்தி அசத்தினார். இருப்பினும் 51(44) ரன்கள் எடுத்தபோது ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய ரிபேல் படேலும் 23(13) ரன்களுக்கு மோஹித் ஷர்மாவிடம் ஆட்டமிழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 130 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க வீரர்களான விருத்திமான் சஹா ரன்கள் ஏதுமின்றி கலீல் அஹமத் பந்துவீச்சிலும், ஷுப்மன் கில் 6(7) ரன்களில் ஆன்ட்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த விஜய் சங்கர் 6(9) ரன்களில் இஷாந்த் ஷர்மாவிடம் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின் களமிறங்கிய டேவிட் மில்லரும் ரன்கள் ஏதுமின்றி குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறியதால், 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி தடுமாறியது. இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா -அபினவ் மனோகர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் 44 பந்துகளில் அரைசதம் கடக்க,  மறுமுனையில் மனோகர் 26(33) ரன்களுடன் கலீல் அஹமதிடம் ஆட்டமிழந்தார்.

இதனால் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நோர்ட்ஜே வீசிய 19வது ஓவரில் ராகுல் திவாட்டியா அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இருப்பினும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில், அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 20(7) ரன்கள் எடுத்திருந்த திவாட்டியாவை வீழ்த்தியதுடன், 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெல்லி கேப்பிடல்ஸ் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Be the first to comment on "டெல்லி அணியின் அபார பந்துவீச்சால் குஜராத் டைட்டன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது."

Leave a comment

Your email address will not be published.


*