டெத் ஓவர்களில் சொதப்பிய பஞ்சாப்…மும்பை அணி அபார வெற்றி!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்-ரவுண்டர்கள் டெத் ஓவர்களில் சொதப்பலாக பந்து வீசியதால், அந்த அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது.

பந்து வீச்சுக்கு சாதகமான அபுதாபி மைதானத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய மும்பை அணியில், குவின்டன் டி காக் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனால், மும்பை அணி 21 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது.

மறுமுனையில், ரோஹித் ஷர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்த ஆரம்பித்தார். இருப்பினும், அவரும் 45 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், கெய்ரன் பொல்லார்டு மற்றும் ஹார்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களைப் பஞ்சராக்கினர். கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் விளாசியதால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 191 ரன்களை குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டும் எடுத்தது. கடைசி மூன்று ஓவர்களில் ஜேம்ஸ் நீஷம், கிருஷ்ணப்பா கௌதம் போன்ற ஆல்-ரவுண்டர்கள் பந்து வீசியதால் 18 பந்துகளில் 62 ரன்களை குவித்த மும்பை அணி தனது ஸ்கோரை 191ஆக உயர்த்தியது.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி, முப்பை இந்தியன்ஸ் பௌலர்களை எதிர்கொள்ள திணறினர். கே.எல்.ராகுல் 17 ரன்களும், மயங்க் அகர்வால் 25 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், கருண் நாயர் டக்-அவுட் ஆனார்.

அடுத்துக் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஓரளவுக்கு அதிரடி காட்டி 44 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இறுதியில், மேக்ஸ்வெல் போன்றவர்கள் சரியாக சோபிக்காததால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டும் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 70 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்

Be the first to comment on "டெத் ஓவர்களில் சொதப்பிய பஞ்சாப்…மும்பை அணி அபார வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.