டி20 உலகக்கோப்பையில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ள நிலையில், மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெறவுள்ளனர்.

www.indcricketnews.com-indian-cricket-news-01095

மும்பை: கிரிக்கெட் உலகம் மொத்தமும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13 வரையிலான தேதிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா சென்றுவிட்ட ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அணியில் இடம்பெற்றிருந்த பிரதான பவுலரான ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யாமல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வரை இழுத்தடித்து வருகிறது. இந்திய அணிக்கு பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திர வீரரான தீபக் சாஹரும் காயத்தால் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காயத்தால் அவதிப்பட்டு வந்த சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர், காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து சமீபத்தில் தான் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். குறிப்பாக  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பந்துவீச்சு, பேட்டிங் என கலக்கினார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டிருந்த தீபக் சாஹருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தென்னாப்பரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதில் மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த தீபக் சாஹருக்கு பெங்களூரில் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இத்தொடருக்கு முன்பாக தீபக் சாஹர் காயத்திலிருந்து குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர்,”தீபக் சாஹர் குணமடைய சிறிதுகாலம் ஆகும். அவரது கணுக்கால் தற்போது நன்றாக உள்ளது அங்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவருடைய முதுகு வலி பிரச்சனை மீண்டும் தலைதூக்கியுள்ளது. எனவே  முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப பிசிசிஐ முடிவுசெய்துள்ளது” இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்கு பதில் மாற்று வீரராக ஷர்துல் தாகூரையும், பும்ராவிற்கு பதிலாக முகமது ஷமியும் அணியில் தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் முகமது சிராஜ் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

மேலும் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இன்று ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாகவும், ரவி பிஷ்னோய் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இப்போதைக்கு பயணம் செய்ய வாய்ப்பில்லை என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment on "டி20 உலகக்கோப்பையில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ள நிலையில், மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெறவுள்ளனர்."

Leave a comment

Your email address will not be published.


*