ஜெய்ஸ்வாலின் அதிரடியான சதத்தால், மும்பை இந்தியன்ஸை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

www.indcricketnews.com-indian-cricket-news-1002031142
Yashaswi Jaiswal and Sanju Samson (c) of Rajasthan Royals during match 38 of the Indian Premier League season 17 (IPL 2024) between Rajasthan Royals and Mumbai Indians held at the Sawai Mansingh Stadium, Jaipur on the 22nd April 2024. Photo by Deepak Malik / Sportzpics for IPL

ஜெய்ப்பூர்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 38வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா-இஷான் கிஷான் ஜோடியில் அதிரடியாக விளையாட முற்பட்ட ரோஹித் ஷர்மா 6(5) ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷானும் ரன்கள் ஏதுமின்றி நடையைக்கட்டினார்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அணியை சரிவிலிந்து மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 10(8) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த முகமது நபி- திலக் வர்மா ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நபி 23(17) ரன்களுடன் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன்பின் திலக் வர்மாவுடன் இணைந்த நேஹல் வதேரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின்  ஸ்கோர் 150 ரன்களை கடந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 99 ரன்களை எட்டியது. அதுமட்டுமின்றி இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேஹல் வதேரா 49(24) ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 10(10) ரன்கள் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினார்.

இவர்களைத்தொடர்ந்து இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த திலக் வர்மா 65(45) ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஜெரால்ட் கோட்ஸியும் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டிம் டேவிட்டும் 3(5) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளையும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர் -யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித்தள்ளினர்.

இதன்மூலம் ராஜஸ்தான் அணி பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைக் குவித்திருந்த போது, மழை  காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் மழை நின்றவுடன் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் 35(25) ரன்கள் எடுத்திருந்த ஜோஸ் பட்லர் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்- கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் அரைசதம் விளாச, மறுமுனையில் சஞ்சு சாம்சனும் தொடர்ந்து சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

அதன்பின்னரும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபார்மிற்கு திரும்பிய ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்தது மட்டுமின்றி இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஜெய்ஸ்வால் 104(90) ரன்களையும், சஞ்சு சாம்சன் 38(28) ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலில் தங்களது முதல் இடத்தையும் தக்கவைத்துக்கொண்டது. 

Be the first to comment on "ஜெய்ஸ்வாலின் அதிரடியான சதத்தால், மும்பை இந்தியன்ஸை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்."

Leave a comment

Your email address will not be published.


*