நாக்பூர்: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் -உஸ்மான் கவாஜா ஜோடியில் முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரின் முதற்பந்திலேயே கவாஜா 1(3) ரன்னுடன் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அதற்கடுத்த ஓவரிலேயே ஷமி பந்தை தவறாக கணித்த டேவிட் வார்னர் 1(5) ரன்னில் போல்ட் ஆனார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த லபுஷேன் -ஸ்மித் ஜோடி பொறுப்பாகவும் திறமையாகவும் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் ஸ்மித் நங்கூரம் போட்டு களத்தில் நிற்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி 49(123) ரன்களை எடுத்திருந்த லபுஷேன், ஜடேஜாவின் பந்துவீச்சில் இறங்கிவந்து விளையாட முற்பட்டு கே.எஸ்.பரத்தால் ஸ்டம்பிட் ஆனார். இந்நிலையில் அதற்கடுத்து வந்த ரென்ஷாவும் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதுமின்றி ஜடேஜாவிடம் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து களத்திலிருந்த ஸ்மித் பவுண்டரிகளாக விளாசிய நிலையில், அவரை க்ளீன் போல்ட்டாக்கி வெளியேற்றினார் ஜடேஜா. இதனையடுத்து ஹேன்ட்ஸ்ஹோம்- அலெக்ஸ் ஹேரி ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இதில் அபாரமாக ஆடி 36(33) ரன்கள் எடுத்த ஹேரியின் விக்கெட்டை கைப்பற்றிய அஷ்வின், தொடர்ந்துவந்த கம்மின்ஸையும் 6(14) ரன்களுக்கு வீழ்த்தினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய டாட் மர்ஃபியை ரன் ஏதுமின்றி எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டாக்கி வெளியேற்றிய ஜடேஜா, மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ஹேன்ட்ஸ்ஹோமையும் 31(84)ரன்களுக்கு எல்.பி.டபள்யூ முறையில் வீழ்த்தினார். இறுதியில் போலண்ட் 1(8) விக்கெட்டையும் அஷ்வின் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி 63.5 ஓவர்களிலேயே 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியை தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா- கே.எல்.ராகுல் ஜோடியில் தொடக்கம் முதலே பவுண்டரிகளாக விளாசிய ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
ஆனால் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 20(71) ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாட் மர்ஃபியின் பந்துவீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் நோக்கி நடையைக்கட்டினார். அதன்பின் ரவிச்சந்திரன் அஷ்வின் களமிறங்கினார். இறுதியில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 77 ரன்களைச் சேர்த்தது. இதில் ரோஹித் சர்மா 56(69) ரன்களுடனும், அஷ்வின் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடரவுள்ளது.
Be the first to comment on "ஜடேஜா, அஷ்வினின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்குள் சுருண்டது."