சாம்சன், சாஹல் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்.

www.indcricketnews.com-indian-cricket-news-0120

மும்பை: ஐபிஎல் 15வது சீசனின் 5வது போட்டியில் முதன்முறையாக புனே நகரத்தின் எம்சிஏ மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர்-யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 20(16) ரன்கள் எடுத்தபோது  ஷெஃபெர்டு பந்துவீச்சிலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடி களத்திலிருந்த பட்லர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 35(28) ரன்கள் எடுத்திருந்தபோது உம்ரான் மாலிக் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்த விக்கெட் இழப்பு இருந்தாலும்,100வது போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இருப்பினும் படிக்கல் 4 பவுண்டரி, 2  சிக்ஸர் உட்பட 41(29) ரன்கள் எடுத்தபோது உம்ரான் மாலிக் வீசிய 14வது ஓவரில் ஆட்டமிழக்க,அரைசதம் விளாசிய சாம்சன் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 55(27) ரன்கள் எடுத்தபோது புவனேஷ்வர் குமார் பந்துவீச்சால் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்நிலையில் கடைசிநேர அதிரடிக்கு களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மயரால் அணியின் ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. இருப்பினும் டி.நடராஜன் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 32(13) ரன்களுடன் ஹெட்மயர் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ரியான் பராக் 12(9) ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 211 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் ஆரம்பமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் அணியின் முன்னனி வீரர்களான கேப்டன் வில்லியம்சன் 2(7) ,ராகுல் திரிபாதி 0(3), அபிஷேக் ஷர்மா 9(19) ,விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் 0(9) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர் விக்கெட் சரிவால் தொடக்கம் முதலே திணறி வந்த அணியை காப்பாற்ற களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 57(41) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருக்க, மறுமுனையில் யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் அப்துல் சமாத் 4(6) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரொமாரியோ ஷெஃபெர்டு 2 சிக்ஸர் உட்பட 24(18) ரன்கள் எடுத்திருந்தபோது யுஸ்வேந்திர சாஹல் வீசிய 15வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் மார்க்ரம்க்கு துணையாக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 40(14) ரன்கள் எடுத்திருந்தபோது டிரெண்ட் போல்ட் பந்துவீச்சால் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

Be the first to comment on "சாம்சன், சாஹல் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்."

Leave a comment

Your email address will not be published.


*