சஹலின் மாயாஜால சுழலில் சிக்கிய ஹைதராபாத்…பெங்களூரு அணி அபார வெற்றி!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் போலவே, இப்போட்டியிலும் டாஸ் வென்ற அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் களமிறங்கிய பெங்ளூரு அணி, தொடக்கத்தில் ரன் வேட்டையாடிய நிலையில் டெத் ஓவர்களில் தடுமாறியது. இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கி ஹைதராபாத் அணி தொடக்கத்தில் சிறப்பாக சோபித்தாலும் கடைசியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

முதலில் பேட் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். பவர் பிளேவில் 53 ரன்கள் விளாசிய இவர்கள், 10ஆவது ஓவர் வரை ஆட்டமிழக்காமல் பௌலர்களை திணறடித்தனர். படிக்கல் அதிரடியாக விளையாடினாலும், ஃபிஞ்ச் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த பந்தில் ஆரோன் ஃபிஞ்ச் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். விராட் கோலி, ஷவம் துபே அடுத்தடுத்து நடையைக் கட்டினர். டிவிலியர்ஸ் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி 30 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதனால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.

டெத் ஓவர்களில் ஹைதராபாத் அணி சிறப்பாக செயல்பட்டு ரன் வேட்டையை தடுத்தது. நடராஜன், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஹைதராபாத் சிறப்பான தொடக்கத்தைத் தர முயற்சித்தனர். 1.4 ஆவது ஓவரில் பேர்ஸ்டோ அடித்த பந்து, பௌலர் உமேஷ் யாதவ் கையில்பட்டு எதிர்முனை ஸ்டெம்பில் விழுந்தது. வார்னர் ரன் ஓடுவதற்காக கிரிஸை விட்டு வெளியே நகர்ந்ததால் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே, பேர்ஸ்டோவுடன் பார்ட்னஷிப் அமைத்து விளையாடினார்.

48 பந்துகளில் 75 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஹைதராபாத் தள்ளப்பட்டது. பேர்ஸ்டோ 61 ரன்கள் எடுத்து சஹலிடம் வீழ்ந்த நிலையில் விஜய் சங்கர் கோல்டன் டக் ஆனார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 153 ரன்களுக்கு ஹைதராபாத் ஆல்அவுட் ஆகி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

யுஸ்வேந்திர சஹல் 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

Be the first to comment on "சஹலின் மாயாஜால சுழலில் சிக்கிய ஹைதராபாத்…பெங்களூரு அணி அபார வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*