சவுதம்டனில் நாளை தொடங்குகிறது: உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்து இருக்கும் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்

3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13-ந் தேதி சிட்னியில் காலி மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. 117 நாட்கள் இடைவெளிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் மீண்டும் களம் திரும்புகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா தொற்று எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த போட்டியில் மோதும் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் அனைவரும் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தை ஒட்டி இருக்கும் ஓட்டலில் மருத்துவ பாதுகாப்பு வசதிகளுக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு பயிற்சியை தொடங்கிய இரு அணியினரும் பலமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் களம் காணுகிறார்கள்.

143 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வித்தியாசமான சுழ்நிலையில் நடக்க இருக்கும் இந்த போட்டிக்கான புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீரர்கள் தாங்கள் பயன்படுத்தும் கண்ணாடி, தொப்பி உள்ளிட்ட உடமைகளை நடுவரிடம் (வழக்கமாக பந்து வீசும் போது கொடுப்பது உண்டு) வழங்கக்கூடாது. சக வீரர்களிடமும் கொடுக்கக்கூடாது. வீரர்கள் உடலோடு உரசி மகிழ்ச்சியை கொண்டாடுவதையும், குளிர்பானம், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

அத்துடன் பந்து மீது எச்சிலை தேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை தொட்ட பிறகு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கட்டுப்பாட்டை மீறி பந்தில் எச்சிலை தேய்த்தால் இன்னிங்சில் 2 முறை எச்சரிக்கை விடுக்கப்படும். அதனையும் மீறினால் பவுலரை தண்டிக்கும் விதமாக 5 ரன்கள் பெனால்டியாக விதிக்கப்படும். போட்டியின் போது வீரர்கள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவருக்கு தகுந்த மாற்று வீரரை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது உள்பட பல தற்காலிக வழிகாட்டுதல்கள் இந்த போட்டி தொடரில் அமல்படுத்தப்படுகிறது.

ரசிகர்கள் இன்றி மயான அமைதிக்கு மத்தியில் வழக்கத்துக்கு மாறான முறையில் அரங்கேற இருக்கும் இந்த போட்டியை உலகமே உற்று நோக்கி வருகிறது.

Be the first to comment on "சவுதம்டனில் நாளை தொடங்குகிறது: உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்து இருக்கும் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்"

Leave a comment

Your email address will not be published.


*