சஞ்சு சாம்சனின் பெயர் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் உள்ளது- இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா

www.indcricketnews.com-indian-cricket-news-0103

நியூ டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி வரும பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடியபோது தீபக் சஹார் மற்றும் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து நீண்ட காலமாக அணியில் இடம் பிடிக்காமல் இருந்து வரும் சஞ்சு சாம்சனுக்கு இத்தொடரில் இடம் வழங்கப்பட்டுள்ளது. துணைக் கேப்டனாக ஜஸ்பரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதைதொடர்ந்து சஞ்சு சாம்சன் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா,

“இந்திய அணியின்  திறமையான பேட்ஸ்மேன்களில் ஒருவர் சஞ்சு சாம்சன்.அவர் அதிரடியான பேட்ஸ்மேன் மட்டுமல்ல சிறந்த விக்கெட் கீப்பரும் ஆவார்.  ஐபிஎல் தொடரில் சில இன்னிங்ஸை அனைவரும் வியக்கும் வண்ணம் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேலும் பேக்ஃபுட் ஷாட் ,பிக் அப் புல் மற்றும் கட் ஷாட் என பெரிய பெரிய ஷாட்டுகளை அசாத்தியமாக ஆடி மிகப்பெரிய ஸ்கோர் செய்யக்கூடிய அபாரமான பேட்டிங் திறமை கொண்ட திறமையான பேட்ஸ்மேன் ஆவார். ஆனால் அவருடைய பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாததாலும், இந்திய அணியில் ஏற்கனவே கிடைத்த வாய்ப்புகளில் பெரிதாக சோபிக்காததாலும் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

திறமையான வீரர்கள் இங்கு நிறைய இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திறமையை களத்தில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் மிகமுக்கியம். ” எனத் தெரிவித்தார். மேலும்,”சஞ்சு சாம்சனின் திறமை பற்றி அணி நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும். அவருடைய திறமையை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.  ஆனால், அவர் அவருடைய திறமையை எப்படி களத்தில் பயன்படுத்துகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு வழங்கும் போதெல்லாம் அவருக்கு நம்பிக்கையும் கொடுப்போம்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பந்த் விளையாடததால் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆடும் லெவனில் இடம் கிடைக்க ஏதுவாக, சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். எனவே ஆடும் லெவனில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதால்  இத்தொடர் சஞ்சு சாம்சனுக்கு மிக முக்கியமான தொடர்.

மேலும் டி20 உலககோப்பை போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் பெயர் நிச்சயம் பரிசீலிக்கப்படும். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது பெரிய ஷாட்டுகளை ஆடும் திறமை வேண்டும். அந்ததிறமை அவரிடம் நிறையவே இருக்கிறது. பந்துவீச்சாளருக்கு மேலே ஷாட் அடிப்பார்,அதெல்லாம் அடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதனால் சஞ்சு சாம்சன் அந்த திறமையை நல்லவிதமாக பயன்படுத்துவார் என நம்புகிறேன்.” இவ்வாறு ரோஹித் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.