கோஹ்லி மற்றும் ஜடேஜா ஆகியோரின் அதிரடியால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10034936
KOLKATA, INDIA - NOVEMBER 05: Ravi Jadeja of India celebrates the wicket of Kagiso Rabada of South Africa for their fifth wicket during the ICC Men's Cricket World Cup India 2023 between India and South Africa at Eden Gardens on November 05, 2023 in Kolkata, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

கொல்கத்தா: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா-ஷுப்மன் கில் ஜோடியில் ஆரம்பம் முதலே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய ரோஹித் 40(24) ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து கில்லும் 23(24) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி -ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இருப்பினும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் 77(87) ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கே.எல்.ராகுல் 8(17) ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 22(14) ரன்களுக்கும் என அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய  கோஹ்லி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49ஆவது சதத்தைப் பதிவுசெய்து  ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை சமன்செய்தார்.

இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்களை குவித்தது. இதில் கோஹ்லி 101(121) ரன்களுடனும், ஜடேஜா 29(15) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்திலிருந்தனர்.  தென்னாப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா,லுங்கி இங்கிடி, மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அணியின் தொடக்க வீரரான குயின்டன் டி காக் 5(10) ரன்னுடன் சிராஜ் பந்துவீச்சில் ஆடட்மிழக்க, மறுமுனையில் கேப்டன் டெம்பா பவுமா 11(19) ரன்களுடன் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி நடையைக்கட்டினர்.

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸின் வெண்டர் டுசென் 13(32) ரன்களில் எல்பிடபள்யூ முறையிலும், ஐடன் மார்க்ரம் 9(6) ரன்களிலும் முகமது ஷமியிடம் விக்கெட்டை இழக்க, தொடர்ந்துவந்த ஹென்ரிச் கிளாசென் 1(11), டேவிட் மில்லர் 11(11), கேசவ் மகாராஜ் 7(11), காகிசோ ரபாடா 6(26) ஆகியோரது விக்கெட்டுகளை ஜடேஜா கைப்பற்றி, தனது 5 விக்கெட்டையும் பதிவுசெய்து அசத்தினார்.

இறுதியில் களமிறங்கிய மார்கோ ஜான்சென் 14(30) ரன்களும் , லுங்கி நெகிடி ரன்கள் ஏதுமன்றியும் குல்தீப் யாதவிடம் ஆடட்மிழக்க, அடுத்துவந்த ககிசோ ரபாடாவும் 6(26) ரன்களுக்கு ஜடேஜாவிடம் வீழ்ந்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Be the first to comment on "கோஹ்லி மற்றும் ஜடேஜா ஆகியோரின் அதிரடியால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி."

Leave a comment

Your email address will not be published.


*