கோலிக்கு வயசாயிடுச்சு…. தோல்விக்கு காரணம் சொல்லும் கபில்தேவ்

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வயதாகிவிட்டதாகவும், அவர் தன்னுடைய கண்களின் பார்வைத் திறனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். தற்போதைய நிலைமையில், விராட் கோலிக்கு 3 மாதங்கள் தொடர் பயிற்சி தேவைப்படுவதாகவும், அதன்பின்பு தான் அவர் தன்னுடைய பழைய பார்மிற்கு வர முடியும் என்றும் கூறியுள்ள கபில்தேவ், அதற்கு ஐபிஎல் போட்டிகள் அவருக்கு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்-ஸ்விங் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரிகளை விளாசும் வல்லமை வாய்ந்த விராட் கோலி, தற்போது அத்தகைய பந்துகளை எதிர்கொள்வதில் தயக்கம் காட்டுவதாகவும், அவருடைய பலமே தற்போது பலவீனமாக மாறியுள்ளதாகவும் கபில் கூறியுள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான 3 தொடர்களை கொண்ட போட்டிகளில் விளையாடிய விராட் கோலி தொடர்ந்து தன்னுடைய சொதப்பலான ஆட்டங்களையே வெளிப்படுத்தினார். இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரில் அவர் மொத்தமாக 38 ரன்களே எடுத்திருந்தார். இதேபோல 3 தொடர்களையும் சேர்த்து அவர் 218 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதில் சொல்லிக்கொள்ளும்படி ஒரேயொரு அரைசதம் மட்டுமே எடுக்கப்பட்டது

வெற்றி தோல்விகளின்போது தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை எதிர்கொள்வதே ஒரு சிறந்த கேப்டனின் முக்கிய முதல் கடமையாகிறது. ஆனால் தன்னுடைய வெற்றிகளின்போது எழுப்பப்படும் கமெண்ட்களை சிரித்துக்கொண்டே எதிர்கொள்ளும் விராட் கோலி, தோல்வியடைந்தால் துவண்டுவிடுகிறார். அப்பொழுது எழுப்பப்படும் விமர்சனங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் கேன் வில்லியம்சனின் அவுட்டின்போது, மைதானத்தில் எகிறி குதித்து தன்னுடைய ஆவேசத்தை வெளிப்படுத்திய கோலி, தொடர்ந்து ரசிகர்களை பார்த்து வாயை மூடிக்கொண்டிருக்கும்படியும் சைகை புரிந்தார். போட்டியின் முடிவில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அனல்கணைகளை அவர் தெறிக்கவிட்டார்.

இந்நிலையில் விராட் கோலிக்கு வயதாகி விட்டதாகவும், அவர் தனது பார்வைத்திறனை சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்றும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார். 30 வயதாகிவிட்டாலே பார்வைத்திறன் குறையும் என்று கூறியுள்ள கபில்தேவ், முன்னணி வீரர்கள் வீரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றவர்களும் இத்தகைய பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னை நோக்கி வரும் பந்துகளை சரியான நேரத்தில் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த கோலியின் சமீபத்திய போட்டிகளில் அவர் பந்தை எதிர்கொள்ள காலதாமதம் செய்வது தெரிகிறது என்று கூறியுள்ள கபில்தேவ், அவர் தன்னை சரிசெய்து கொள்வதற்கு 3 மாதங்கள் பிடிக்கும் என்றும் சிறப்பான தொடர்ந்த பயிற்சிகளை அவர் மேற்கொண்டால் மட்டுமே அவர் இதிலிருந்து மீளமுடியும் என்றும் கூறியுள்ளார். இதற்கு ஐபிஎல் போட்டிகள் கோலிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "கோலிக்கு வயசாயிடுச்சு…. தோல்விக்கு காரணம் சொல்லும் கபில்தேவ்"

Leave a comment

Your email address will not be published.


*