கொரோனா சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதான வீரர்கள் அறையை வழங்க தயாராக உள்ளோம்: கங்குலி்

கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரசால் முக்கியமான நகரங்கள் வெறிச்சோடிய நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள வீரர்கள் தங்கும் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தவித்து வருகிறது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டி அச்சுறுத்தும் வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன்காரணமாக முக்கியமான இடங்கள் வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வெறிச்சோடிய கொல்கத்தா நகர படங்களை டுவிட்டர் பக்கத்தில் அப்லோடு செய்து இதுபோன்று எனது நகரத்தை பார்ப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளார்.

சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னுடைய நகரத்தை இப்படி பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. .. பாதுகாப்பாக இருப்போம்… இந்த சூழ்நிலை விரைவில் மிகவும் சிறப்பான வகையில் மாறும்’’என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போது வரை இந்தியா முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ நெருங்குகிறது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் படுக்கைகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.

மேற்கு வங்காளத்திலும் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவேளை சிகிக்சை அளிக்க இடம் தேவை என்றால் ஈடன் கார்டன் மைதானத்தில் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அரசு எங்களிடம் கேட்டால், நாங்கள் கொடுப்பதற்காக தயாராக உள்ளோம். இந்த நேரத்தில் இருந்து எது தேவையென்றாலும் அதை செய்ய இருக்கிறோம். இதில் எந்தவித பிரச்சனையும் இல்லை’’ என்றார்.

சவுரவ் கங்கலி பிசிசிஐ தலைவராக பதவி ஏற்பதற்கு முன் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "கொரோனா சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதான வீரர்கள் அறையை வழங்க தயாராக உள்ளோம்: கங்குலி்"

Leave a comment

Your email address will not be published.


*