கே.எல்.ராகுல்-சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அரைசதத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை தொடக்க ஆட்டத்தில் வீழ்த்தியது.

www.indcricketnews.com-indian-cricket-news-100123

திருவனந்தபுரம்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. இந்நிலையில் இத்தொடரின் முதலாவது டி20 போட்டி கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்திலுள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குயிண்டன் டி காக்-கேப்டன் டெம்பா பவுமா ஜோடியில் தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பவுமா டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பிறகு இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் தென்னாப்பிரிக்க அணிக்கு பயத்தை காட்டியதோடு மட்டுமல்லாமல், அதே ஓவரில் தனது அபாரமான பந்துவீச்சால் அதிரடி ஆட்டக்காரரான டி காக்கை 1(4) ரன்னிலும், ரிலீ ரூஸ்சோ மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை டக் அவுட்டாக்கியும் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இவர்களைத்தொடர்ந்து தீபக் சஹார் பந்துவீச்சில் ஸ்டப்ஸ்-ம் கோல்டன் டக் அவுட்டாகி நடையைக்கட்டினார். இதனால் 2.3 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்கம் நிலைத்து நின்று விளையாடி வந்த நிலையில், ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் 25(24) ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த வெய்ன் பார்னெல்-கேசவ் மகாராஜ் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருப்பினும் அக்ஸர் படேலின் அசத்தலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பார்னெல் 24(37) ரன்களிலும், தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேசவ் மகாராஜ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41(35) ரன்கள் எடுத்தபோது ஹர்ஷல் படேல் பந்துவீச்சிலும் நடையைக்கட்டினார்.

இதனால் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ரபாடா பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் ஷர்மா ரன் ஏதுமின்றி கோல்டன் டக் அவுட்டாகியும் ,தொடர்ந்து வந்த விராட் கோலி 3(9) ரன்கள் எடுத்தபோது ஆன்ரிச் நோர்ஜே பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரரான கே.எல்.ராகுல்-சூர்யக்குமார் யாதவ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் 16.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதில் ராகுல் 51(56) ரன்களுடனும், சூர்யக்குமார் யாதவ் 50(33) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

Be the first to comment on "கே.எல்.ராகுல்-சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அரைசதத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை தொடக்க ஆட்டத்தில் வீழ்த்தியது."

Leave a comment

Your email address will not be published.


*