கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு இந்த முதல் டெஸ்ட் போட்டி நம்பிக்கையைத் தரும்- முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்

www.indcricketnews.com-indian-cricket-news-024

நியூ டெல்லி: நாளை முதல் (மார்ச் :4) நடைபெறவிருக்கும் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் துவங்கவுள்ளது. இதில் முதன்முறையாக டெஸ்ட் தொடரின் கேப்டனாக  ரோகித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தை தொடர்ந்து, டெஸ்ட் தொடரின் கேப்டனாக இருந்த விராட் கோலி பதவிவிலகினார். இதனையடுத்து டெஸ்ட் தொடரின் கேப்டனாக ரோஹித் ஷர்மா பொறுப்பேற்றுள்ளார்.  இதன்மூலம், ரோகித் இந்தியாவை மிக நீண்ட வடிவத்தில் வழிநடத்தும் 35வது இந்திய கிரிக்கெட் வீரராவார்.

இந்நிலையில் ரோகித் குறித்து ,இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கூறுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிக்கு கேப்டனாக இருப்பது எளிதான வேலையாக இருந்ததில்லை. ஆனால் ரோஹித் அந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.டெஸ்ட் கேப்டன்களில் ஒருவரான  கோஹ்லி,தனது வெற்றிகள் மற்றும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் வலுவான பாரம்பரியத்தை விளையாட்டு வரலாற்றில் விட்டுச்சென்றுள்ளார்.

 அதை முன்னெடுத்துச் செல்லும் கடினமான பணி ரோஹித்துக்கு உள்ளது .ஆகையால்  அவருக்கு இப்பதவி ஒரு பெரிய கவுரவமாக இருக்கும். அவர் முழுநேர கேப்டனாக மட்டுமல்லாமல், இதற்குமுன் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சில ஆட்டங்களுக்கு இந்தியாவை வழிநடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ரோஹித்தின் விளையாட்டு தனக்கு நம்பிக்கையை அளிப்பதாகவும் ” அகர்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அகர்கர், “இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் அவருடைய பேட்டிங் அவருக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கும். மேலும், கேப்டன் பதவிக்கு தேவையான அனுபவமும் கிடைத்துள்ளது.ஒரு தலைவராக மட்டுமல்ல அணியில் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்க விரும்பும் அவர் ,மற்ற வீரர்களிடமிருந்தும் இதை எதிர்பார்க்கலாம்.

தொடக்கத்தில் சாதாரண சாதனையை கொண்டிருந்த ரோகித், வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மிடில்ஆர்டரில் போராடினார்.  ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய பங்களிப்பு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் ஒரு தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டார் .அதுமட்டுமின்றி 2019 முதல் சொந்த மண்ணில் விளையாடிய தொடர்களில் இந்தியாவின் சிறந்த பேட்டராக இருந்தார்.

ஆனால் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட் சற்று வித்தியாசமாக இருக்கும்.ஆனால் தனது பதவிக்காலத்தை சொந்த மண்ணில் தொடங்கவிருப்பதால் அவரது பாத்திரத்தை எளிதாக்க இது உதவும் .மேலும் இந்தியாவிடம் மிகவும் வலுவான அணி உள்ளதால், இது அவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை ” இவ்வாறு அகர்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தெரிவித்துள்ளார்.