கேதார் ஜாதவின் மோசமான பேட்டிங்கால் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் சென்னை தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, அந்த அணியின் திரிபாதி, சுக்மன் கில் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 12 பந்துகளை சந்தித்த கில் 11 ரன் எடுத்த நிலையில் ஷார்துல் தாகூர் பந்து வீச்சில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஷேன் வாட்சன், டு பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

10 பந்தில் 17 ரன் எடுத்த நிலையில் ஷிவம் மாவி பந்து வீச்சில் டுபிளசிஸ் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த வாட்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளை சந்தித்த ராயுடு 30 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய வாட்சன் 40 பந்தில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 50 ரன்கள் எடுத்து நரைன் பந்து வீச்சில் வெளியேறினார்.

13.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது சென்னை அணிக்கு அந்த கட்டத்தில் 67 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கே இருந்தது.

ஆனால், வாட்சன் அவுட் ஆனதை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டோனி 12 பந்தில் 11 ரன்கள் எடுத்து சகரவர்த்தி பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். சாம் கரன் 17 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து, பிராவோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேதார் ஜாதவ் களமிறங்கினார். கடந்த சில ஆட்டங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாதவ் இப்போட்டியில் சிறப்பாக ஆடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த போட்டியிலும் அவரின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

ஆனால் போட்டியின் முக்கிய கட்டத்தில் 12 பந்துகளை சந்தித்த கேதார் ஜாதவ் 1 பவுண்டரி உள்பட 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்த சென்னை அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

Be the first to comment on "கேதார் ஜாதவின் மோசமான பேட்டிங்கால் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் சென்னை தோல்வி"

Leave a comment

Your email address will not be published.


*