கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வென்றுகொடுத்த முன்னாள் வீரர் மரணம்..

www.indcricketnews.com-indian-cricket-news-125

1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில், கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி அபாரமாக வெற்றியைத் தழுவியது. இதில் இந்திய அணியில் யஷ்பால் ஷர்மா முக்கிய வீரராவார். இவர் தற்போது திடீர் மாரடைப்பு காரணமாக இறந்தார். காலமான யஷ்பால் ஷர்மாவுக்கு 66 வயது, மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்துக்கொண்டிருந்தார். 1954ஆம் ஆண்டு, பஞ்சாப் லூதியானாவில் பிறந்த யஷ்பால் ஷ்ர்மா, 1978-ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்த ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டிலும்  மிடில் வரிசையில்  விளையாடினார். 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் யஷ்பால் ஷர்மாவும் மிக முக்கியமானவர். இந்திய கிரிக்கெட் அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில், 1,606 ரன்களை அடித்துள்ளார்.

இதில் இரண்டு சதங்களும், 9 அரை சதங்களும் உள்ளன. இவர் 42 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 883 ரன்களை அடித்துள்ளார். இதில் 4 அரை சதங்கள் அடங்கியுள்ளன. இந்த அதிகபட்ச ஸ்கோரை 1983ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் போது விளாசினார். இதன்மூலம், இந்திய அணி பலம் வாய்ந்த மே.இ.தீவுகள் அணியைச் எளிதில் வென்றது. யஷ்பால் ஷர்மா, 1985ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பிறகு சிறிது காலம் நடுவராக பணியாற்றி வந்தார், பின்பு, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது இந்திய அணித் தேர்வாளராகவும் இருந்திருக்கிறார். மேலும் 1982 ல் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குண்டப்பா விஸ்வநாத்துடன்  இணைந்து யஷ்பால் சர்மா பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த 316 ரன்களை அடித்தார்கள். இது இன்றளவும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இன்னிங்ஸில் சர்மா 140 ரன்களை அடித்தார். இந்தியாவின் சிறந்த 3வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 22 ஆண்டுகள் இந்த சாதனை நின்றது. பின்பு 2004ஆம் ஆண்டு முல்தானில் சேவாக் – சச்சினின் 336 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் இதை முறியடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இவருக்காக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் மற்றும் ரசிகர்களும் தங்களது  அனுதாபத்தை  தெரிவித்து  வருகின்றனர்.

Be the first to comment on "கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வென்றுகொடுத்த முன்னாள் வீரர் மரணம்.."

Leave a comment