காட்டடி அடித்த ரோஹித், கோலி! கோப்பையை தட்டித் தூக்கியது இந்தியா!

India wins t20 aganist england
India wins t20 aganist england

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இன்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, விராட் கோலி களமிறங்கினர். ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து அசத்தினார். இறுதியில் 34 பந்துகளில் 64 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். இருப்பினும், இந்திய அணியின் அதிரடி ரன் வேட்டை தொடர்ந்தது.
மறுமுனையில் கோலி நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்து எதிர்முனை பேட்ஸ்மேன்களுக்கு ஸ்ட்ரைக்கை விட்டுக்கொடுத்து வந்தார். இதனால், 3ஆவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து அதிரடி காட்டி, இங்கிலாந்து அணிக்கு அணிக்கு நடுக்கத்தை ஏற்படுத்தினார். இறுதியில் ஜோர்டன் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து, ஜேசன் ராயிடம் பந்தைத் தூக்கிப் போட்டதால் சூர்யகுமார் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஹார்திக் பாண்டியா, கோலி இருவரும் வாண வேடிக்கை நிகழ்த்தினார். விராட் கோலி 52 பந்துகளில் 80* ரன்களும், ஹார்திக் பாண்டியா 17 பந்துகளில் 39* ரன்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்கள். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 224/2 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணி சேஸ்ஸிங்:
மெகா இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியில் ஓபனர் ஜேசன் ராய் இரண்டு பந்துகளை எதிர்கொண்டு டக்-அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர், டேவிட் மாலன் இருவரும் பார்னர்ஷிப் அமைத்து இந்திய பௌலர்களை தெறிக்கவிட்டனர். 100 ரன்களை கடந்து இந்த பார்ட்னர்ஷிப் நீடித்தது. இதனால் இந்திய அணிக்கு அழுத்தங்கள் ஏற்பட்ட நிலையில் 12.5 ஓவரில் புவனேஷ்வர் குமார் அற்புதமாகப் பந்துவீசி பட்லரை 52 (34) வெளியேற்றினார். அடுத்து 14ஆவது ஓவரில் ஷர்தூல் தாகூர் விஸ்வரூபம் எடுத்து டெவிட் மாலன் 68 (46), ஜானி பேர்ஸ்டோ 7 (7) இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால், போட்டி இந்திய அணிக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அடுத்துக் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் ஜோர்டன் போன்றவர்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறினர். இதனால், இங்கிலாந்து அணி 188/8 ரன்கள் சேர்த்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்திய அணியும் 3-2 எனத் தொடரைக் கைப்பற்றி கோப்பையைத் தட்டித்தூக்கியது.இப்போட்டியில் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

Be the first to comment on "காட்டடி அடித்த ரோஹித், கோலி! கோப்பையை தட்டித் தூக்கியது இந்தியா!"

Leave a comment

Your email address will not be published.