மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது பழைய ரெட்-ஹாட் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதுமட்டுமின்றி தான் ஒரு ரன் மெஷின் என்பதை மீண்டும் நிரூபிக்கத் தொடங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனது 72வது சர்வதேச சதத்தை பதிவுசெய்த 34 வயதான விராட் கோலி, கடந்த செவ்வாய்க்கிழமையன்று ( ஜன: 10) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 87 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது 73வது சதத்தை பதிவுசெய்துள்ளார்.
அதுமட்டுமின்றி 1214 நாட்களுக்கு பிறகு இந்திய மண்ணில் சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 45வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மேலும், சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்தோர் பட்டியலில், சச்சினின் சாதனையை கோஹ்லி சமன் செய்துள்ளார். இந்திய மண்ணில் 160 இன்னிங்ஸ்களில் 20 சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வெறும் 99 இன்னிங்ஸில் கோஹ்லி சமன் செய்துள்ளார். அதேபோல இலங்கைக்கு எதிராக 8 சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை 9 சதங்கள் அடித்து கோஹ்லி முறியடித்துள்ளார்.
டெண்டுல்கரைப் போலவே, கோஹ்லியும் இந்தியாவில் கிரிக்கெட்டின் தூதராக ஆனதால், இந்தியாவின் பேட்டிங் திறமை அவரைச் சுற்றி அங்கீகரிக்கப்பட்டது. அதேசமயம் கோஹ்லியும் சச்சினை போல அடிக்கடி சாதனைகளுக்காக விளையாடுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோஹ்லி விரைவில் முறியடிப்பார் என முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை அடித்து முதலிடத்தில் இருக்கிறார். தற்போது 45 சதங்களை அடித்துள்ள விராட் கோலி இன்னும் 5 சதங்களை அடித்துவிட்டால், சச்சினை முந்தி உலக சாதனை படைப்பார் .இது நடந்தால் சச்சின் டெண்டுல்கர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். கோஹ்லி தற்போது இருக்கும் ஃபார்மில், இந்த சாதனையை அவர் விரைவில் முறியடிக்கப் போகிறார் என்று நான் நினைக்கிறேன்.
இந்த நேரத்தில் கோஹ்லி சாதனைகளுக்காக விளையாடுகிறார் என்று நான் நினைக்கவில்லை. அவர் தற்போது இந்திய அணிக்காக ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் அதில் முழு கவனமும் செலுத்தி வருகிறார் “இவ்வாறு சபா கரீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1983 மற்றும் 2011ல் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியனாக உருவெடுத்துள்ள இந்திய அணி, மூன்றாவது முறையாக வெல்வதற்கான வாய்ப்பில் கோஹ்லியின் ஃபார்ம் பெரும் பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "ஒருநாள் கிரிக்கெட்டில் கோஹ்லி தனது 45வது சதத்தை அடித்த பிறகு பிசிசிஐயின் முன்னாள் தேர்வாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்."