ஐ.பி.எல். கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய 47வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ட்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சகா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இவர்களின் கூட்டணியில் ஐதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்பட்டது.

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக பவர்-ப்ளே முடிவதற்குள் அரை சதத்தைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இன்றைய ஆட்டத்தில் டேவிட் வார்னர்(54 ரன்கள், 26 பந்துகள்) பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அஸ்வின் வீசிய 10வது ஓவரில் டேவிட் வார்னர்(66 ரன்கள், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டேவுடன் விருத்திமான் சகா ஜோடி சேர்ந்து களத்தில் அதிரடி காட்டினார். இன்றைய ஆட்டத்தில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசிய விருத்திமான் சகா(87 ரன்கள், 45 பந்துகள்) நார்ட்ஜே பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் மனீஷ் பாண்டே தனது பங்கிற்கு 4 பவுண்டரிகளையும் 1 சிக்ஸரையும் பறக்கவிட்டார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. மனீஷ் பாண்டே(44 ரன்கள்) மற்றும் கேன் வில்லியம்சன்(11 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி தற்போது விளையாடி வருகிறது.

பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய ரஹானே மற்றும் ஷிகார் தவான் ஜோடியில், தவான் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 5(6) ரன்களும், ஹெட்மயர் 16(13) ரன்களும், ரஹானே 26(19) ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 7(12) ரன்களும், அக்‌ஷர் படேல் 1(4) ரன்னும், ரபாடா 3(7) ரன்னும், நிதானமாக ஆடிய ரிஷாப் பாண்ட் 36(35) ரன்களும், ஆர்.அஸ்வின் 7(5) ரன்களும், நார்ட்ஜ் 1(3) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி"

Leave a comment

Your email address will not be published.