ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வீழ்த்தியது

அபுதாபியில் நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அமர்க்களமாக தொடங்கிய ரோகித் சர்மா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 12 ரன்களில் (10 பந்து) பியுஷ் சாவ்லாவின் சுழலில் கேட்ச் ஆனார். மறுமுனையில் சிறிது நேரம் அதிரடி காட்டிய டி காக் 33 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் சவுரப் திவாரியும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து மும்பை அணியின் ரன்வேகத்தை அதிகப்படுத்தினர். 180 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்த்த வேளையில் கடைசி கட்டத்தில் சென்னை பவுலர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷேன் வாட்சன் 4 ரன் டிரென்ட் பவுல்ட் பந்துவீச்சிலும், முரளிவிஜய் 1 ரன் பேட்டின்சன் பந்து வீச்சிலும் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். இதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர்.

தொடக்கத்தில் நிதானம் காட்டிய அம்பத்தி ராயுடு அதன் பிறகு அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்து அசத்தியதுடன் ஐ.பி.எல்.-ல் தனது 19-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார்.

அணியின் ஸ்கோர் 121 ரன்களாக உயர்ந்த போது அம்பத்தி ராயுடு 71 ரன்களில் ராகுல் சாஹரின் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா 10 ரன் தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பிறகு வந்த சாம் கர்ரன் 6 பந்தில் 18 ரன்கள் விளாசி நெருக்கடியை தணித்தார்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரின் முதல் 2 பந்தையும் பிளிஸ்சிஸ் பவுண்டரிக்கு விரட்டியடித்து இலக்கை எட்ட வைத்தார். சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிராக தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும்.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வீழ்த்தியது"

Leave a comment

Your email address will not be published.


*