ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 29-ந்தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க இருந்தது. ஆனால் திடீரென விசுவரூபம் எடுத்த ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசின் சீற்றத்தால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஐ.பி.எல். போட்டி ரத்தானால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காலஇடைவெளியில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது. இருப்பினும் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஐ.சி.சி. தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்த பிறகே ஐ.பி.எல். போட்டி அட்டவணை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் இறங்குவது என்று பி.சி.சி.ஐ. காத்திருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போவதால் உகந்த சூழல் இல்லாதபட்சத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டிற்கு மாற்றுவது குறித்தும் பி.சி.சி.ஐ. யோசிக்க தொடங்கி இருக்கிறது.

இது குறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்துவதில் சாத்தியமான எல்லாவித அம்சங்களையும் பி.சி.சி.ஐ. பரிசீலிக்கிறது. ஒருவேளை ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டிற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதுவும் நடக்கலாம். ஆனால் அது கடைசிகட்ட முயற்சியாகவே இருக்கும்.

வெளிநாட்டில் ஏற்கனவே ஐ.பி.எல். போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அது போல் மீண்டும் நடத்த முடியும். ஆனாலும் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கே முதலில் முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றார்.

இந்தியாவில் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்த போது, பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய அரசு கூறியதால் அந்த ஆண்டுக்குரிய ஐ.பி.எல். போட்டி முழுமையாக தென்ஆப்பிரிக்காவில் அரங்கேறியது.

இதே போல் 2014-ம் ஆண்டில் ஐ.பி.எல்.-ன் தொடக்க கட்ட லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை"

Leave a comment

Your email address will not be published.