ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு; முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னையில் மோதல்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததாலும், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக மகுடம் சூடியது.

6 நகரங்களில் நடக்கிறது
இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்துவதில் தீவிரம் காட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம் போட்டி அட்டவணை குறித்து அணிகளின் நிர்வாகிகள், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், அரசு சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோரிடம் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டனர். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராதால் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தை அமைத்து போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் 14-வது ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார். இதன்படி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டும் இந்த முறை ஐ.பி.எல். போட்டி நடைபெறுகிறது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் மராட்டிய அரசு அளித்த உத்தரவாதம் காரணமாக போட்டிக்குரிய இடங்களில் மும்பையும் சேர்க்கப்பட்டு உள்ளது.

தொடக்க ஆட்டத்தில் யார்?
8 அணிகள் இடையிலான ஐ.பி.எல். திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 30-ந்தேதி அரங்கேறுகிறது. ஒவ்வொரு ஆட்டமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அதுவே ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் இருந்தால், முதலாவது ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மொத்தம் 11 நாட்களில் இரண்டு ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு; முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னையில் மோதல்"

Leave a comment

Your email address will not be published.


*